திருப்பூர்:காங்கயம் பகுதியில் அதிகரிக்கும் ஆடு திருட்டுகள் விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து நடவடிக்கை கோரி, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காங்கயம் சுற்றுப் பகுதியில், படியூர், ஊதியூர், வெள்ளகோவில், நத்தக்காடையூர் பகுதிகளில் விவசாயிகள், ஆடு, மாடு வளர்க்கின்றனர்.இப்பகுதிகளில், இரவு மற்றும் பகல் நேரங்களில், இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வரும் மர்ம நபர்கள் ஆடுகளைத் திருடி செல்வது அதிகரித்துள்ளது.
இது குறித்து காங்கயம் போலீசில் புகார் அளித்தால், நடவடிக்கை எடுக்காமல், புகார் கூற வருவோரை அலைக்கழித்தும், மரியாதை குறைவாக பேசி அவமதிப்பதாக புகார் எழுந்துள்ளது.ஆடுகள் திருட்டு சம்பவத்தில் போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதாக கூறி, விவசாயிகள் நேற்று முன்தினம் காலை காங்கயம் டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி, டி.எஸ்.பி., குமரேசனிடம் மனு அளித்தனர்.
விவசாயிகள் கூறியதாவது:காங்கயம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பே முக்கிய தொழிலாக உள்ளது. கால்நடை வளர்ப்பு மூலம் கிடைக்கும் வருமானத்தைகொண்டு விவசாயிகள் வாழ்க்கை நடத்துகின்றனர்.இரவு நேரங்களில் மர்ம கும்பல் ஆடு மற்றும் கோழிகளை திருடிச் செல்வது அடிக்கடி நடக்கிறது.இதுகுறித்து புகார் செய்தால், போலீசார் அதை பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டுகின்றனர். விவசாயிகளை மரியாதை குறைவாக நடத்துகின்றனர். இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.