திருப்பூர்:''கீழ்பவானி வாய்க்காலை கான்கிரீட்டாக மாற்றுவது விவசாயிகளுக்கான திட்டம் அல்ல; கமிஷன் பெறுவதற்கான திட்டம்,'' என, பா.ஜ., விவசாய அணி தலைவர் தெரிவித்துள்ளார்.பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், கீழ்பவானி பாசன பகுதி விவசாயிகளை சந்தித்து பேசினார்.
அப்போது, அவரிடம் விவசாயிகள் கூறியதாவது:பவானிசாகர் அணையின் மூலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களில், 2.07 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறது; 120 கி.மீ., நீளமுள்ள மண் வாய்க்காலை, கான்கிரீட் வாய்க்காலாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.இத்திட்டத்தால், நீர்கசிவு மூலம், நிலத்தடி நீர் செறிவூட்டப்படுவதும், விவசாய நிலம் பயன்பெறுவதும் பாதிக்கும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்தில், கரையில் உள்ள, நான்கு லட்சம் மரங்கள் அழிக்கப்படும்; கசிவுநீர் கிடைக்காமல், விளை நிலம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.தொடர்ந்து, நாகராஜ் கூறுகையில்,''கீழ்பவானி கான்கிரீட் திட்டம், விவசாய நலனுக்கான திட்டம் இல்லை; கமிஷன் பெறுவதற்கான திட்டமாக இருக்கிறது. விவசாயம் பாதிக்கும் என்பதால், பா.ஜ., இத்திட்டத்தை எதிர்க்கிறது. கான்கிரீட்தளம் அமைக்க வேண்டாம் என்ற விவசாயிகளின் கோரிக்கையை, பா.ஜ., ஆதரிக்கும்,'' என்றார்.