இயற்கை பெருங்கொடை; அதைக் கெடாமல் பார்த்துக்கொள்வது மனித குலத்தின் கையில்தான் இருக்கிறது. ஆனால், மனிதர்களின் செயற்கையாக மாற்றும் வல்லமையால், இயற்கை அழிந்துகொண்டே இருக்கிறது.
வேளாண்மையிலும், அதிகளவில் ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.. இயற்கை இடுபொருட்கள் பயன்படுத்தும் விவசாய நிலங்களில், மண்ணின் வளம் ஆரோக்கியமாக இருக்கிறது.வண்ணத்துப்பூச்சிகள் சிறகடித்து பறப்பதைப் பார்த்து ரசிக்காதவர்கள் இருக்க முடியுமா? இன்றோ கிராமங்களில் கூட வண்ணத்துப்பூச்சிகளைக் காண முடியவில்லையே? குட்டீஸ் பலர், 'பட்டர்பிளைனா என்ன?' என்று கேட்கும் சூழல் நெருங்கிவிடும் போல் தோன்றுகிறது.குட்டீசுக்கு வண்ணத்துப்பூச்சிகள் என்றால் அலாதி பிரியம்; அது பறந்துவரும்போது, அதைப் பிடித்துவிட வேண்டும் என்று அவர்களது கைகள் துடிக்கும். பல நிறங்களில் வண்ணத்துப்பூச்சிகள்,விவசாயத்துக்கு அடிப்படையாகவும், விவசாயிகளுக்கு நண்பராகவும் விளங்குகின்றன.மலர்களில், மதுரம் உறிஞ்சி குடித்து, தோட்டம் முழுவதும் பரவி மகரந்த சேர்க்கையை அதிகரிக்கச் செய்யும் வண்ணத்துப்பூச்சிகள், அனைத்து உயிரினங்களின் வாழ்வியலுக்கும் அடிப்படை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், அதீத ரசாயன பூச்சிக்கொல்லி மற்றும் உரப்பயன்பாடு, புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால், வண்ணத்துப்பூச்சிகள் அருகிவருகின்றன. தட்டான்பூச்சிகள், தேனீக்கள் உள்ளிட்ட பயிருக்கு நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்து வருகின்றன.அதிக ரசாயனம் பயன்படுத்தாத இயற்கை சூழல் பாதிக்காத விளைநிலங்கள், வனத்தில் மட்டுமே, தற்போது பட்டாம்பூச்சிகளை அதிகம் காண முடிகிறது.இயற்கை விவசாயிகள், மண்ணுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் உரங்கள், இயற்கை பூச்சிக்கொல்லிகள் தயாரித்து பயன்படுத்துகின்றனர். அங்கெல்லாம் வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்களை காண முடிகிறது.
இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:அதீத ரசாயனம், உலக வெப்பமயமாதல் என பல காரணங்களால், வண்ணத்துப்பூச்சிகளின் இயற்கை செயல்பாடுகளான மதுரம் தேடுதல், பறத்தல் உள்ளிட்டவற்றில் தடை ஏற்படுவதுடன், இனப்பெருக்கம் பாதித்து அழிந்து வருகின்றன. வண்ணத்துப்பூச்சிகளில் அழிவு இயற்கைச்சமநிலை அழிந்து வருவதற்கான சாட்சி. ரசாயன பயன்பாட்டை முடிந்த வரை தவிர்ப்பது நன்று. வீடுகளில், விளைநிலங்களில் வண்ணத்துப்பூச்சிகளுக்கு தேவையான பூக்களை வளர்க்க வேண்டும்.இதன் வாயிலாக அவற்றை காக்க முடியும். எங்கு அதிக அளவில் வண்ணத்துப்பூச்சியை காண முடிகிறதோ, அந்தப்பகுதி இயற்கை மாசுபடாமல் ஆரோக்கியமாக உள்ளது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.