நம்மூரில் பெண்கள் திருவிழாக்களின் போது வீட்டு வாசலில் பெரிது பெரிதாக கோலம் போட்டு அசத்துவார்களே... அப்படி வட இந்திய பெண்கள் சுவர்களில் ஓவியம் வரைந்து அசத்தும் கலைதான் மதுபாணி சித்திரங்கள்.
நமது பெண்கள் கோலம் என்ற அரிய கலையை கிட்டத்தட்ட மறந்து போய்விட்டார்கள். ஆனால், பீஹார் பெண்கள் பாரம்பரியத்தை மறக்கவில்லை. அதை அவர்கள் வெளிநாடு வரை கொண்டு போய்விட்டார்கள். நாம் நமது பாரம்பரியத்தை தொலைத்து நிற்கிறோம்' என்ற உண்மையை உரக்க சொல்கிறார் ஓவிய கலைஞர் வந்தனா, 66.டெல்லியில் பிறந்து வளர்ந்து, வாரணாசியில் ஓவிய கலைப்பிரிவில் பட்டயப்படிப்பு முடித்து, திருமணத்துக்கு பின், திருப்பூரில் செட்டிலாகி விட்டார் வந்தனா. இவரது மரபு சார்ந்த ஓவிய படைப்புகள் உலக அளவிலான கண்காட்சியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.இந்தியாவில் உள்ள அனைத்து மரபு சார்ந்த ஓவிய படைப்புகளை உலகம் அறிய செய்ததோடு, அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு சேர்ந்து வரும் இவரிடம் பேசியபோது...ஹிமாசல பிரதேசத்தின் காங்கடா பெயின்டிங் முதல் நம்மூர் தஞ்சாவூர் பெயின்டிங் வரை, இந்திய நாட்டுப்புற ஓவியக்கலைகள் மிகவும் தொன்மையானவை. 3 ஆயிரம் ஆண்டு வரலாற்றை தாங்கி நிற்கின்ற-ன. வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு மக்களின் இன கலாச்சாரத்தையும் அங்கு வசிக்கும் பறவை, விலங்குகளையும் அழகுற பிரதிபலிக்கும் விதமாகவே அமைந்திருக்கும்.சமீப காலமாக இந்திய நாட்டுப்புற ஓவியக்கலைகளுக்கு அங்கீகாரமும் ஆதரவும் குறைந்து வருகின்றது. இவற்றை தொன்று தொட்டு கட்டிக்காத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் திறமை வாய்ந்த கலைஞர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகின்றது. பொருளாதார நெருக்கடியால் இக்கலைஞர்கள் பாரம்பரிய ஓவியக்கலைகளை தொடர முடியாமல் தவிக்கும் நிலை உருவாகி வருகின்றது.இவற்றை அழிவிலிருந்து சிறிதேனும் மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஒன்றே சர்வதேச இந்திய ஓவியக்கலைக்கூடம் நிறுவனம், பாரம்பரிய இந்திய ஓவியங்களின் அளவற்ற அழகை சர்வதேச மேடையில் அரங்கேற்றி வருகிறது. ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் கண்காட்சியில் என்னுடைய படைப்புகள் இடம்பெறுவதே பெருமைக்குரிய விசயம்.இந்த ஓவியக்கலைகளுக்கு சர்வதேச அங்கீகாரமும் ஆதரவும் கிடைக்க ஒவியக்கலைஞர்களையும் அவற்றை கற்றுக்கொள்ள விழையும் கலை ஆர்வலர்களையும் ஓருங்கிணைக்கும் முயற்சியாக, குருகுலம்' என்ற பயிற்சி வகுப்புகளும் இந்நிறுவனத்தில் இடம் பெற்றுள்ளது. இதன்மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்தும் வருகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.கோந்த் ஓவியம், பட்டசித்ரா ஓவியம், மதுபாணி ஓவியம்,
மண்டலா ஓவியம், கேரள மியூரல் ஓவியம், வர்லி ஓவியம் தஞ்சாவூர் உள்ளிட்ட ஓவியங்களை கீ செயின், மொபைல் பவுச், டேபிள் ஸ்டாண்ட் என, இளைஞர்களை கவரும் வகையில் ஓவிய படைப்புகளை கொண்டு சேர்க்கிறேன்.