சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அடிப்படை வசதிகள் உயருமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சிகளில் 2008ம் ஆண்டுக்குப் பிறகு சொத்து வரி உயர்த்தப்படவில்லை.தமிழக அரசு 25 முதல் 150 சதவீதம் வரையிலான சொத்து வரி உயர்வை அறிவித்தது. இதை அரசியல் கட்சியினர் எதிர்த்தனர்; பொதுமக்களிடமும் எதிர்ப்பு எழுந்தது. போராட்டங்களும் நடைபெற்றன.அடிப்படை வசதிகள் செய்வதற்கு, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு நிதியாதாரம் தேவை. சொத்துவரி முக்கியமான நிதியாதாரம்.வெளிப்படையாக அரசியல் கட்சியினரும், பொதுமக்களும், சொத்து வரி உயர்வுக்கெதிராக குரல் கொடுத்தாலும், எழுத்துபூர்வமாக, பொதுமக்களிடம் இருந்து ஆட்சேபனைகள், எதிர்பார்த்த அளவு வரவில்லை.பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியன விலை உயர்ந்துள்ளதால், ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவிக்கின்றனர். இந்த நேரத்தில் சொத்து வரியையும் உயர்த்தி விட்டார்களே என்ற குரல் ஒலிப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ''உள்ளூர் நிலவரங்களை அனுசரித்து வரிவிகிதங்களை நிர்ணயிக்க வேண்டும்; ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படக்கூடாது'' என்று முதல்வர், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தி யிருக்கிறார்.சொத்து வரி நகர்ப்புற உள்ளாட்சிகளின் முதன்மையான வருவாய். கடந்த 2008-க்குப் பிறகு, சொத்து வரிவிகிதங்கள் சீராய்வு செய்யப்படவில்லை.இதனால், சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.ஆண்டுதோறும் சொத்து வரி உயரும் அதே நேரம், பொதுமக்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் மேற்கொள்வதில் உரிய அக்கறை காட்டப்படுமா என்ற கேள்வி எழுகிறது.திருப்பூரில், பெரும்பாலான பகுதிகள், குறைந்தபட்சம் ஏதேனும் அடிப்படை வசதிக் குறைபாடுடையதாகவே திகழ்கின்றன. குடிநீர், சாலை, சாக்கடை என்று வசதி குறைபாடுகள் இல்லாத இடங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.குறைபாடுகளை அகற்ற உரிய அக்கறை செலுத்தப்பட வேண்டும். அப்போதுதான் சொத்து வரி வசூல் உயர்வு என்பது அவசியமானது என்பதையும் மக்கள் உணர முடியும்.ஆட்சேபனை மனுக்கள் சொற்பம்
அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சிகள் சார்பில், சொத்து வரி உயர்வு தொடர்பாக ஆட்சேபனைகள் மற்றும் கருத்துகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கடந்த ஏப்., மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆட்சேபம் தெரிவிப்பதற்கான அவகாசம் பெரும்பாலான இடங்களில் முடிந்தாலும், ஆட்சேபனை மனுக்கள் சொற்ப அளவிலேயே வந்துள்ளன.''மக்கள் எழுத்துபூர்வமாக ஆட்சேபனை தெரிவிக்காவிட்டாலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்கள் கடும் வேதனையில் உள்ளனர். அதேசமயம், சொத்து வரியை உயர்த்தாமல் உள்ளாட்சிகளால் செயல்பட முடியாது. ஆட்சிப் பொறுப்பேற்கும் கட்சிகள் சொத்து வரியை உயர்த்துவது வழக்கமானதுதான் என்று மக்கள் கருதி ஆட்சேபனை தெரிவிக்காமல் இருந்திருக்கலாம்'' என்ற கருத்தை முன்வைக்கின்றனர், கட்சியினர்.