கல்யாணம், காதுகுத்து, சீர் விழாவுல, பந்தி போடுவாங்க... கேள்விப்பட்டிருக்கோம், அதென்ன ஜமாபந்தி?
வருவாய்த்துறையின், வரவு - செலவுகளை சரிபார்த்து தணிக்கை செய்வதையே ஜமாபந்தி என்கிறோம். இந்தாண்டு நடக்கப்போவது, 1,431வது பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி என்கிறது வருவாய்த்துறை.கிராம நிர்வாகம், பிர்கா நிர்வாகம், தாலுகா, வருவாய் கோட்டம், மாவட்டம் என, ஐந்து அடுக்குகளாக வருவாய்த்துறை இயங்குகிறது. நிர்வாகத்துறையான வருவாய்த்துறை, கலெக்டர் தலைமையில் இயங்குகிறது. அக்பர் ஆட்சிக்காலத்தில் இருந்தே, ஜமாபந்தி என்ற பெயருடன், வருவாய் தீர்வாயம் நடந்து வந்தது.தமிழக அரசு நடத்தும் வருவாய் தீர்வாயத்தில், வருவாய்த்துறை பராமரிக்கும், 24 வகையான பதிவேடுகளை சரிபார்த்து, ஒப்புதல் அளிக்கப்படுகிறது. நில உரிமையாளர் விவரம் அடங்கிய, 'அ' பதிவேடு, விவசாய சாகுபடி பதிவான அடங்கல் பதிவேடு; புறம்போக்கு ஆக்கிரமிப்பு விவரம் அடங்கிய, 'பி' மெமோ' விவரம்;அரசு நிலத்தில் உள்ள வருவாய் தரும் மரங்களுக்கு வழங்கிய, '2சி' பட்டா விவரம், ஓராண்டில் நடந்த சான்றிதழ் பணி; நிலம் வகை மாற்றம், பட்டா வழங்கியது. நில ஆவணங்களில் செய்த திருத்தம் போன்ற விவரங்களை சரிபார்த்து, ஜமாபந்தி அலுவலரால் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.ஜமாபந்தி என்பது, வருவாய்த்துறை கொண்டாடும் மிகப்பெரிய திருவிழா; ஜமாபந்தி அலுவலர் துவங்கி, கிராம உதவியாளர் வரை, அனைவரும், 'டிப்-டாப்'டாக உடையணிந்து, வழக்கமான வருவாய்த்துறை சடங்குகளை செய்ய இருக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில், 24ம் தேதியில் இருந்து ஜமாபந்தி துவங்குகிறது. தற்போதுள்ள இளைஞர்களும், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, ஜமாபந்தி அலுவலரிடம் மனு கொடுக்கலாம்!