திருப்பூர்:திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆடை தைத்து தருவதற்காக, வெளிமாவட்டங்களில் எட்டு ஜாப்ஒர்க் நிறுவனங்கள் துவக்கப்பட்டுள்ளன.பின்னலாடை தொழில் வளர்ச்சியால், திருப்பூர், வேலை வாய்ப்பு மிகுந்த நகராக மாறியுள்ளது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஒன்பது லட்சம் தொழிலாளர் பணிபுரிகின்றனர். ஆனாலும், தொழிலாளர் பற்றாக்குறை நீடிக்கிறது.
திருப்பூர் ஸ்ரீபுரம் அறக்கட்டளை மற்றும் பொதிகை மனிதவள அமைப்பு, பின்னலாடை நிறுவனங்களின் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னையை போக்குவதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.இந்த அமைப்பு நடத்திய கள ஆய்வில், பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிவதற்கு ஏற்ற ஏராளமான தொழிலாளர் உள்ளனர். ஆனால், பெரும்பாலானோர், திருப்பூருக்கு வர இயலாத நிலையில் உள்ளனர் என்பது தெரிந்தது.இதனால், தொழிலாளர் மிகுந்த மாவட்டங்களில், உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தி, திருப்பூருக்கு ஆடை தைத்து கொடுக்க, மதுரை, திருச்சி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில், எட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.பொதிகை அமைப்பு நிர்வாக இயக்குனர் சுந்தரேசன் கூறியதாவது:ஸ்ரீபுரம் அறக்கட்டளை மற்றும் பொதிகை மனிதவள அமைப்பின் ஆறு ஆண்டுகால தொடர் முயற்சியாக, ஜாப்ஒர்க் நிறுவனங்கள் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது.
மதுரை - தத்தனேரி, மேலுார், உசிலம்பட்டி, திருச்சி - மணப்பாறை, விருதுநகர் - ஆமத்துார், ராஜபாளையம், சிவகங்கை - மானாமதுரை என, மொத்தம் எட்டு தையல் 'ஜாப்ஒர்க்' நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன.இவற்றில், அந்தந்த பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். இவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, பயிற்றுனர்கள் தயார் நிலையில் உள்ளனர். வெளிமாவட்டங்களில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கு, திருப்பூர் உள்நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்டர் வழங்கும்.இதனால், திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி செலவினம் வெகுவாக குறையும். தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னைகளும் நீங்கும். இவ்வாறு, அவர் கூறினார்.