திருப்பூர்:தமிழக அரசு மற்றும் திருப்பூர் ரோட்டரி பொதுநல அறக்கட்டளை சார்பில், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், புற்றுநோய் சிகிச்சை மையம் அமைய உள்ளது.இது குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில், ரோட்டரி பொதுநல அறக்கட்டளை தலைவர் டாக்டர் முருகநாதன் பேசியதாவது:திருப்பூரில் அமையவுள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தில், 'லைனீர் ஆக்ஸலரேட்டர்' என்ற அதிநவீன கருவியை பொருத்தி, சிகிச்சை அளிக்கப்படும். மொத்தம், 60 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம், இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்படும்.முதலில், சிகிச்சை அளிக்கும் கருவி பொருத்தி, சிகிச்சையை துவக்கலாம். முதல்கட்டமாக, 10 கோடிரூபாய் செலுத்தினால், 20 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை செய்ய முடியும். ஸ்கேன் மெஷின், ஜெனரல் வார்டு, அறுவை சிகிச்சை பிரிவு, கேத் லேப், ஆய்வகம், சிறு கூட்டரங்கு, ஆலோசனை அறைகள் அமைக்கப்படும்.திருப்பூரில் உள்ள ரோட்டரி சங்கங்கள், பொதுநல அமைப்புகள், தொழில்துறையினர் பங்களிப்பு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
பாதிப்புகள் அதிகம்
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை 'டீன்' முருகேசன் பேசுகை யில்,''தேசிய சுகாதார திட்ட அதிகாரிகள், புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வரு கிறது; எனவே, புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க யோசனை கூறினர். வேலுார், சென்னைக்கு அடுத்தபடியாக, திருப்பூரில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை கிடைக்கும்,'' என்றார்.
ரூ.3.59 கோடி பங்களிப்பு
புற்றுநோய் சிகிச்சை மையம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர் சாமிநாதன், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் பங்கேற்றார். தொழில் அமைப்பினர், ரோட்டரி நிர்வாகிகள், தன்னார்வ அமைப்பினர் தங்கள் பங்களிப்பு நிதியை, அமைச்சர் கயல்விழியிடம் வழங்கினர். மொத்தம், 3.59 கோடி ரூபாய் பங்களிப்பு தொகையாக வழங்கப்பட்டது.
தாராளமாக உதவலாமே!
கூட்டத்தில், கலெக்டர் வினீத் பேசுகையில்,''புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க, நமக்கு நாமே திட்டத்தில் ஏற்பாடு செய்யப்படும். மாநகராட்சி மூலமாக இதற்கான முன்னேற்பாடு துவங்கியுள்ளது. பொதுமக்கள் நலனுக்காக, தன்னார்வ அமைப்புகள் தொழில்துறையினர் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்,'' என்றார்.