ஊட்டி:நவீன ஊட்டியை உருவாக்கிய ஆங்கிலேய முதல் கலெக்டர் ஜான் சல்லிவனுக்கு அமைக்கப்பட்ட வெண்கல சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.நீலகிரி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்ட தற்போதைய ஊட்டியில், 1822ம் ஆண்டு ஜூன் மாதம், ஜான் சல்லிவன் என்ற ஆங்கிலேய அதிகாரி முதன் முதலாக தனது அலுவலத்தை அமைத்து, நவீன ஊட்டியை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டார். அதன், 200ம் ஆண்டு விழாவை முதல்வர் ஸ்டாலின் ஊட்டியில் துவக்கி வைத்தார்.
இதற்கான பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள, மாநில அரசு பட்ஜெட்டில் சிறப்பு நிதியாக, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊட்டி நகராட்சி சார்பில், 2 லட்சம் செலவில், அரசு தாவரவியல் பூங்கா சாலையில் ஜான் சல்லிவனுக்கு வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் நேற்று இச்சிலையை திறந்து வைத்து, சல்லிவனால் கட்டப்பட்ட முதல் கட்டடத்தை(தற்போதைய அரசு கல்லுாரி) பார்வையிட, கல்லுாரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி உடனிருந்தார்.அதன்பின், 'ஊட்டி-200' குறித்து நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் தர்மலிங்கம் எழுதிய சிறப்பு மலரை முதல்வர் வெளியிட்டு கவுரப்படுத்தினார். முன்னதாக, தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினமான நேற்று, ஊட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே ராஜிவ் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.