கோவை:ஈஷா அறக்கட்டளை சார்பில் துவங்கப்பட்டுள்ள 'மண் காப்போம்' இயக்கத்துக்கு நடிகர் அர்ஜுன் ஆதரவு தெரிவித்துள்ளார்.மண்வளத்தை பாதுகாக்க உலக நாடுகள் சட்டங்கள் இயற்ற வலியுறுத்தியும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, 'மண் காப்போம்' இயக்கத்தை துவங்கி, 100 நாள் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், நடிகர் அர்ஜுன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நடிகர் அர்ஜுன் அறிக்கை:ஒரு பேரழிவு அல்லது எந்த ஒரு நெருக்கடியோ நடக்காது, அதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதே சிறந்த வழி. தற்போது, பெரிய உலகளாவிய நெருக்கடி 'பாலைவனமாக்கல்'. நமது தாய் பூமியின் வளமான, இயற்கையான கரிம மண், அதன் நுண்ணுயிர்களையும், முக்கிய உயிரினங்களையும் இழந்து வெறும் மணலாக மாறுகிறது.
நம்முடைய வணிக விவசாய நடைமுறைகள், பல ஆண்டுகளாக பாலைவனமாக்கலுக்கு வழிவகுத்துள்ளது. மிக விரைவில் அது மிகப்பெரிய இயற்கை பேரழிவாக மாறும். பிறகு, உணவு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும். மண் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களும், கிரகத்துக்கும் உயிர்வாழ மிக முக்கியமானது. இதைப்பற்றி நாம் தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல் தீர்வுகளையும் பரப்ப உதவுவோம். இது இந்த கிரகத்தை காப்பாற்ற உதவுவது மட்டுமல்லாமல், அடிப்படையில் இதை நமக்காக செய்கிறோம். நமக்காகவும், நமது தலைமுறைக்காகவும் செய்கிறோம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.