கரூர், கரூர் நகரப்பகுதிகளில், புதிதாக சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கரூர் மாநகராட்சியில், 48 வார்டுகள் உள்ளன. அதில், வீடுகள், வர்த்தக நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில், புதிதாக சாக்கடை கால்வாய் கட்டும் பணிகள், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கியது.
குறிப்பாக, சர்ச் கார்னர், சுங்ககேட், கலெக்டர் அலுவலக சாலை முக்கிய குடியிருப்பு பகுதிகளில், புதிதாக சாக்கடை கால்வாய் கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடந்தன. தற்போது, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் புதிதாக சாக்கடை கால்வாய் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் முன், குழி தோண்டப்பட்டுள்ளது. சில இடங்களில் கான்கிரீட் கம்பிகள் அமைக்கப்பட்டு, பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், வர்த்தக நிறுவனங்கள் முன், பணிகளை நிறைவு செய்யாததால், வியாபாரிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, கரூர் மாநகராட்சி பகுதிகளில் புதிதாக சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகளை, உடனடியாக தொடங்கி நிறைவு செய்ய வேண்டும் என, பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.