பாசன வாய்க்காலில்
துாய்மை பணி
கிருஷ்ணராயபுரம், மே 22-
மகாதானபுரம் பகுதி வழியாக செல்லும் பாசன வாய்க்காலின் சாலையோரம், துாய்மை பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகாதானபுரம் பஞ்., அலுவலக சாலை வழியாக, பாசன வாய்க்கால் செல்கிறது. பாசன வாய்க்கால் சாலையோர இடங்களில் அதிகமான செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்பட்டது.
இதனால் சாலை வழியாக செல்லும் மக்கள், இரவு நேரத்தில் அச்சத்துடன் சென்று வந்தனர். இந்நிலையில், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் மூலம் சாலையோர இடங்களில் வளர்ந்த புதர்களை அகற்றி துாய்மைப்படுத்தினர். இப்பணிகளை பஞ்., நிர்வாகத்தினர் பார்வையிட்டனர்.
ராஜிவ் நினைவு நாள்
உறுதிமொழி ஏற்பு
குளித்தலை, மே 22-
முன்னாள் பிரதமர் ராஜிவின், 31வது நினைவு நாளையொட்டி, குளித்தலை பஸ் ஸ்டாண்ட் காந்தி சிலை முன், அக்கட்சியினர் அவரது உருவ படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். மாநில பொதுக்குழு உறுப்பினர் இன்ஜினியர் பிரபாகரன் தலைமை வகித்தார்.
தொடர்ந்து, 'வன்முறையை வேரறுத்து, தீவிரவாதத்தை ஒழிப்போம்' என, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும், முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலைக்கு காரணமாக இருந்த, பேரறிவாளனை விடுதலை செய்ததை கண்டித்து, கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில், மாவட்ட மற்றும் குளித்தலை வட்டார காங்., கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சந்தையூர் வாரச்சந்தையில்
ஆடு, கோழி விற்பனை
கிருஷ்ணராயபுரம், மே 22-
சந்தையூர் வாரச்சந்தையில், ஆடு, கோழிகள் விற்பனை தீவிரமாக நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்.,க்குட்பட்ட சந்தையூரில் சனிக்கிழமைதோறும் சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு, சிவாயம் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில் விளைந்த காய்கறி மற்றும் கால்நடைகளான ஆடு, கோழிகள் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
நேற்று கூடிய சந்தையில், ஆடு ஒன்று 8,500 ரூபாய்; நாட்டுக்கோழி கிலோ, 400 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. சந்தைக்கு கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், பஞ்சப்பட்டி, லாலாப்பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்றனர்.
செல்லம்மாள் - பாரதி ரதம்
கரூரில் வரவேற்பு
கரூர், மே 22---
கரூரில் செல்லம்மாள்- - பாரதி ரதத்துக்கு, திருக்குறள் பேரவை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், கடையத்திலுள்ள சேவாலயா செல்லம்மாள்- - பாரதி கற்றல் மையம் சார்பில், பாரதியார்--செல்லம்மாள் புகழை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், ஏப்., 17- முதல் செல்லம்மாள்--பாரதி ரதம் சென்னையில் புறப்பட்டது. குழுவின் தலைவர் தங்கபாண்டியன் தலைமையில், 4 பேர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தை தொடர்ந்து, நேற்று முன்தினம், செல்லம்மாள்--பாரதி ரதம் கரூருக்கு வந்தது. இதனை, கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் தலைமையில், ஜவஹர் பஜார் பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் தமிழ் ஆர்வலர்கள் ஜெயா, பொன்னுசாமி, ராமசாமி, பாலசுப்பிரமணியன், சதாசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ரதம் திண்டுக்கல் வழியாக மதுரைக்கு, நேற்று சென்றது.