சேலம், 'இன்ஸ்டாகிராம்' மூலம் பழகிய, காதலன் வீட்டுக்கு செல்ல வழிதெரியாமல், சேலத்தில் தவித்த பள்ளி மாணவியை, போலீசார் மீட்டனர். தொடர்ந்து, கோவையில் இருந்த அவரது தாயை வரவழைத்து, மாணவியை ஒப்படைத்தனர்.
சேலம், கிச்சிப்பாளையம் பஸ் பணிமனை அருகே, நேற்று முன்தினம் இரவு, 9:45 மணிக்கு, பள்ளி சீருடையில் பிளஸ் 2 மாணவி நின்றிருந்தார். மக்கள் தகவல்படி கிச்சிப்பாளையம் ரோந்து போலீசார், மாணவியை மீட்டு, டவுன் மகளிர் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றனர்.
விசாரணைக்கு பின், போலீசார் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். அவரது தாய், தந்தை தனித்
தனியே வசிக்கின்றனர். மாணவி, தாயுடன் கோவையில் வசிக்கிறார். ஒரு மாதத்துக்கு முன், 'இன்ஸ்டாகிராம்' மூலம், சேலம், குகையை சேர்ந்த, 26 வயது வாலிபரை காதலிக்க தொடங்கினார். தற்போது பொதுத்தேர்வு நடப்பதால், சக தோழி வீட்டில் தங்கி தேர்வு எழுதுவதாக, தாயிடம் கூறிவிட்டு, சேலம் வந்து, காதலன் வீட்டில் தங்கியிருந்து, திருப்பூருக்கு சென்று தேர்வு எழுதி வந்தார்.
நேற்று முன்தினம் தேர்வு முடிந்து, பஸ்சில், சேலம், பழைய பஸ் ஸ்டாண்டுக்கு வந்தார். ஆனால், ஸ்டாண்டுக்குள் பஸ் செல்லாமல், காந்தி சிலை அருகே பயணியரை இறக்கிவிட்டு பணிமனைக்கு சென்றது. காந்தி சிலையில் இருந்து, மாணவி வழி தெரியாமல் நடந்து, பணிமனை அருகே வந்துள்ளார்.
காதலன், மாணவியை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதி யில் தேடிக்கொண்டிருந்தார். மாணவிக்கு, காதலன் வீட்டுக்கு செல்வதற்கு வழி மறந்து விட்டது. அன்று, மொபைல் போனும் எடுத்துச்செல்லாததால் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தார். அப்போதுதான், நாங்கள் மீட்டோம். மாணவிக்கு அறிவுரை வழங்கி, கோவையில் இருந்த தாயை வரவழைத்து, அவருடன் அனுப்பிவைத்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.