சேலம், சேலத்தில், 4 'டாபர்மேன்' நாய்களை திருடிய, நாய் பிரியரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம், கன்னங்
குறிச்சி, கொண்டப்பநாயக்கன்பட்டி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சபரீஷ்துரை, 32. இவரது வீட்டில் வளர்த்து வந்த, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 'டாபர்மேன்' நாயை, கடந்த, 13ல், மர்ம நபர் திருடிச்சென்றார். அதேபோல் சின்னதிருப்பதி, அபிராமி கார்டன், 2வது தெருவை சேர்ந்த செல்வராஜ், 62, வீட்டில், டாபர்மேன் நாய் நேற்று முன்தினம் திருடுபோனது. சின்ன
திருப்பதி காமாட்சி நகரை சேர்ந்த பிரசன்னகுமார் வீட்டிலும், 'டாபர்மேன்' திருட்டுபோனது. இவர்கள் தனித்தனியே அளித்த புகார்படி, கன்னங்குறிச்சி போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், ஜான்சன்பேட்டை ராஜகணபதி நகரை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சண்முகபொன்வேல், 20, மீது, போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்தபோது, நாய்களை திருடியது தெரிந்ததால், போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: சண்முக பொன்வேல், 'டாபர்மேன்' நாய் பிரியர். அவருக்கு, வளர்க்க ஆசை இருந்தும் பணம் இல்லாததால், எந்த வீடுகளில் இவை உள்ளது என சுற்றி பார்த்து, இரவில் பிஸ்கட் போட்டு, நாய்களை திருடிச்சென்றார். கன்னங்குறிச்சியில், 3, அஸ்தம்பட்டி, மணக்காட்டை சேர்ந்த பதுவைநாதன் வீட்டில் ஒன்று என, 4 நாய்கள் திருடியதை ஒப்புக்கொண்டார். காமலா
புரத்தில், வேலைபார்க்கும் இடத்தில் கட்டி போட்டு வைத்திருந்தார். 4 நாய்களும் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.