ரயில் மேம்பால
மே 22-
சேலத்தில் முள்ளுவாடி கேட், அணைமேடு பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளை, கலெக்டர் கார்மேகம் நேற்று ஆய்வு செய்தார்.
பின் அவர் கூறியதாவது: முள்ளுவாடி கேட்டில், 124 கோடி ரூபாயில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணியினை டிசம்பருக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அம்மாபேட்டை ரயில்வே மேம்பாலம், பிரட்ஸ் சாலையில் புதிதாக ரயில்வே மேம்பாலம், கெங்கவல்லி புறவழிச்சாலை, கோட்டையூர், தர்மபுரி மாவட்டத்தில் ஒட்டனுார் ஆகியவற்றை இணைக்கும் ஸ்டேன்லி நீர்
தேக்கத்தின் குறுக்கே உயர்மட்ட பாலம் ஆகிய பணிகளின் விரிவான திட்ட அறிக்கைகளை, விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
'டோக்கன்' வழங்கி
நெல் கொள்முதல்
கெங்கவல்லி,கெங்கவல்லி, கூடமலையில் உள்ள, அரசின் நெல் கொள்முதல் மையத்தில், விவசாயிகளிடம் வாங்காமல், வியாபாரிகளிடம் அதிகளவில் நெல் கொள்முதல் செய்வதாக புகார் எழுந்தது. இதனால், கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. நேற்று, துணை தாசில்தார் ஈஸ்வரி(தேர்தல் பிரிவு) தலைமையில் கண்காணிப்பு குழுவினர், நெல் கொள்முதல் மையத்தை ஆய்வு செய்தனர். அப்போது, வியாபாரி
களிடம் கொள்முதல் செய்ததாக கூறப்பட்ட நெல் மூட்டைகளை, வெளியே அனுப்ப அறிவுறுத்தினர்.
மேலும், 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் கொண்டு வந்த நிலையில், அவர்கள் இடையே எடை போட்டு அடுக்கி வைப்பதில் பிரச்னை எழுந்தது. இதனால், 'நெல் மூட்டைகள், 'டோக்கன்' அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும்' என, குழுவினர் தெரிவித்து, விவசாயிகளுக்கு டோக்கன் வழங்கினர்.
ராஜிவ் நினைவு
தினம் அனுசரிப்பு
ஓமலுார், மே 22-
முன்னாள் பிரதமர் ராஜிவின், 31ம் ஆண்டு நினைவு தினம், சேலம் மேற்கு மாவட்ட காங்., சார்பில், ஓமலுாரில் நேற்று அனுசரிக்கப்பட்டது. மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் முருகன் தலைமை வகித்தார். அதில், ராஜிவின் படத்துக்கு, கட்சியினர் மாலை அணிவித்தனர். தொடர்ந்து, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாநில பொதுக்குழு உறுப்பினர் மணி, மாவட்ட பொதுச்செயலர் கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல், சேலம் கிழக்கு மாவட்ட காங்., தலைவர் அர்த்தனாரி தலைமையில் கட்சியினர், ஆத்துார், காமராஜர் சிலை அருகே உள்ள ஸ்துாபியில், ராஜிவ் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, இளைஞர் காங்., சார்பில், ஆத்துார் அரசு மருத்துவமனையில் ரத்த தானம் வழங்கப்பட்டது.
வக்கீல் சங்க
நிர்வாகிகள் தேர்வு
வாழப்பாடி, மே 22--
வாழப்பாடி வட்டார வக்கீல்கள் சங்க நிர்வாகி கள் தேர்தல், அங்குள்ள நீதிமன்ற வக்கீல்கள் அறையில் நேற்று நடந்தது. அதில் தலைவராக திரவியம், செயலராக செந்தில்குமார், பொருளாளராக சீனிவாசன், நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு, வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள், வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து, வாழப்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைய, இலவச சட்ட உதவி மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, புது நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் புகுந்த பாம்பு
தி.மு.க.,வினர் அலறல்
கெங்கவல்லி, மே 22-
கெங்கவல்லி, கடைவீதி, அண்ணாதுரை சிலை அருகே, தி.மு.க., அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய பொறுப்பாளர் அகிலன் தலைமை வகித்தார். அதில் கட்சி தலைமை பேச்சாளர்கள் இஸ்மாயில், முத்தையா பேசினர். இரவு, 8:10 மணிக்கு முத்தையா பேசிக்கொண்டிருந்தபோது, சாக்கடையில் இருந்து, பெரிய அளவில் நாக பாம்பு கூட்டத்தில் புகுந்தது. இருக்கையில் அமர்ந்திருந்த தி.மு.க.,வினர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், பாம்புவை பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இரவு, 8:40 மணிக்கு மேல் மீண்டும் கூட்டம் தொடங்கியது.
உலக நன்மைக்கு
108 விளக்கு பூஜை
தலைவாசல், மே 22-
தலைவாசல், வீரகனுார், தெற்குமேட்டில் பொன்னாளியம்மன் கோவில் உள்ளது. அங்கு, வைகாசி திருவிழாவையொட்டி நேற்று, உலக நன்மை வேண்டி, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. சுமங்கலி பெண்கள், விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.