'ஓசூரில் இன்று நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, உதயநிதி எம்.எல்.ஏ., வருகை தருகிறார்' என, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, உதயநிதி எம்.எல்.ஏ., இன்று காலை ஓசூர் வருகை தருகிறார்.
ஓசூர் சீத்தாராம் மேட்டில் காலை, 9:00 மணிக்கு, கட்சி கொடியை ஏற்றி வைக்கும் அவர், 9:30 மணிக்கு, ஓசூர் பவானி பேலஸ் திருமண மண்டபத்தில், 600 முதியவர்களுக்கு பொற்கிழி வழங்கி கவுரவிக்கிறார். காலை, 10:00 மணிக்கு, ஓசூர் மீரா மகால் திருமண மண்டபத்தில், மாற்று கட்சியினர் இணையும் விழாவில் பங்கேற்கும் அவர், 10:30 மணிக்கு, தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள வரம் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.
காலை, 11:00 மணிக்கு, ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடக்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில், இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். மதியம், 1:30 மணிக்கு, ஓசூர் மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, மணமக்களை வாழ்த்துகிறார்.
மதியம், 2:30 மணிக்கு, சூளகிரியில் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில், தி.மு.க., மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.