தன் மனைவி என நினைத்து அடுத்தவர் மனைவியை குத்தி கொலை செய்தவர் கைது | வேலூர் செய்திகள் | Dinamalar
தன் மனைவி என நினைத்து அடுத்தவர் மனைவியை குத்தி கொலை செய்தவர் கைது
Added : மே 22, 2022 | |
Advertisement
 


ஆம்பூர், ஆம்பூரில் பிளாட்பாரத்தில் படுத்து துாங்கியவர், தன் மனைவி என நினைத்து, அடுத்தவர் மனைவியை குத்தி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை இந்திரா நகரை சேர்ந்தவர் தேவேந்திரன், 50; மாடு அறுக்கும் தொழிலாளி. இவர் மனைவி ரேணுகாம்பாள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்த விதவை தனலட்சுமி, 35, என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

தேவேந்திரன் தினமும் குடித்து விட்டு வந்ததால், கோபித்துக் கொண்டு தனலட்சுமி ஆம்பூருக்கு வந்து நேதாஜி சாலை பிளாட்பாரத்தில் தங்கினார். இங்கு இவரைப் போல நிறைய அனாதைகள் தங்கியிருந்தனர்.
நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு ஆம்பூருக்கு வந்த தேவேந்திரன் மனைவியை தேடி கண்டுபிடித்து, தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். தனலட்சுமி வர மறுத்து, தேவேந்திரனை அடித்து விரட்டினார்.
ஆத்திரமடைந்த தேவேந்திரன் மனைவியை கொலை செய்யும் நோக்கத்தில் மாடு அறுக்கும் கத்தியுடன் ஆம்பூரில் சுற்றிக் கொண்டிருந்தார். நேதாஜி சாலை பிளாட்பாரத்தில் சக பெண்களுடன் தனலட்சுமி இரவு, 10:00 மணிக்கு படுத்து துாங்கினார். நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு கத்தியுடன் தேவேந்திரன் அங்கு வந்தார்.
துாங்கிக் கொண்டிருந்த பெண்களில் தன் மனைவி இருக்கிறாரா என பார்த்தார். பெண்கள் அனைவரும் கொசு கடிக்கு பயந்து முகத்தை மூடி துாங்கிக் கொண்டிருந்தனர். இதனால் துாங்கிக் கொண்டிருந்த பெண்களில் ஒருவரை தன் மனைவி என நினைத்து கத்தியால் குத்தினார்.
அந்த பெண் அலறிக்கொண்டு ஓட முயன்ற போது மீண்டும், மீண்டும் கத்தியால் குத்தியதில், சம்பவம் நடந்த இடத்திலேயே அவர் இறந்தார்.
அலறல் சத்தம் கேட்டதும் அந்த பெண்ணுக்கு பக்கத்தில் படுத்திருந்த தனலட்சுமி எழுந்தார். தன் மனைவியை பார்த்த தேவேந்திரன் அவரையும் கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் தேவேந்திரனை பிடித்து தர்ம அடி கொடுத்து, ஆம்பூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ஆம்பூர் கம்பிக்கொல்லையை சேர்ந்த நவீத், 30, என்பவர் மனைவி கவுசர், 27, என்பது தெரியவந்தது. திருட்டு வழக்கில் கைதான நவீத், வேலுார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் கவுசரை அங்கிருந்தவர்கள் விரட்டி விட்டதால், ஆம்பூர் நேதாஜி சாலை பிளாட்பாரத்தில் அவர் தங்கியிருந்தார்.
நள்ளிரவு கத்தியுடன் வந்து தேடிய தேவேந்திரன், தன் மனைவி குறட்டை விட்டு துாங்குவார் என்பதால், அங்கு குறட்டை விட்டு துாங்கிய கவுசரை, தன் மனைவி என நினைத்து குத்தி கொலை செய்தது தெரியவந்தது.
போலீசார் தேவேந்திரனை கைது செய்தனர். படுகாயமடைந்த தனலட்சுமி, வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X