ஸ்ரீபெரும்புதுார், ''குற்றவாளி குற்றவாளி தான், ஒருபோதும் கடவுளாக முடியாது,'' என தமிழக காங்., தலைவர் அழகிரி கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் முன்னாள் பிரதமர் ராஜிவ் 1991ம் ஆண்டு மே 21ம் தேதி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். ஸ்ரீபெரும்புதுாரில் ராஜிவ் உயிர் இழந்த இடத்தில் அவருக்கு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 31 ம் ஆண்டு நினைவு தினமான நேற்று அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது. தமிழக காங்., தலைவர் கே.எஸ். அழகிரி உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது கே.எஸ். அழகிரி கூறியதாவது-: ராஜிவ் கொலை செய்யப்பட்ட போது எங்கள் கண்களில் கண்ணீர் ஆறாய் ஓடியது. தற்போது கொலையாளியின் விடுதலையை திருவிழாவாக கொண்டாடுவதை பார்க்கும் போது இதயத்தில் இருந்து ரத்த கண்ணீர் வடிகிறது. இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாங்கள் கதறுகிறோம்; கண்ணீர் விடுகிறோம். மனிதபிமானத்தோடு வாழ்வது தான் மனித தன்மை. பழிவாங்குவது என்பது மனித தன்மை அல்ல. மிருகங்களுக்கு கூட பழிவாங்குகிற குணம் கிடையாது. ஆனால், ஒரு சிலர் பழிவாங்கும் மனப்பான்மையோடு வாழ்கின்றனர்.
தமிழகம் எப்போதுமே நியாயத்திற்கு பெயர்பெற்ற நாடு. தன்னுடைய மகன் ஒரு கன்றின் மீது தேரை ஏற்றி கொன்றான் என்பதற்காக, மகனை தேரை ஏற்றி கொன்ற சோழ பரம்பரையை சேர்ந்தவர்கள் நாங்கள். நீதி வழங்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என சொல்கிறோம். குற்றவாளி குற்றவாளிதான். குற்றவாளி கடவுளாக முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வளவு பேசினாலும், ராஜிவ் கொலைக் குற்றவாளியை ஆரத் தழுவி, ஆனந்தக் கண்ணீர் வடித்த தி.மு.க.,வுடன் கூட்டுறவை முறித்துக் கொள்ள மனமில்லை என்பது போல், அது குறித்து எதுவும் பேசாமல் நகர்ந்தார்.