தஞ்சாவூர் : திருவையாறு அருகே, அரசு மணல் குவாரியில், போலியாக பதிவு எண் ஒட்டி, மணல் ஏற்ற வந்த இரண்டு லாரிகளை, கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரண்டு லாரிகளை ஆய்வு செய்த போது, லாரிகளின் முன் பகுதியில், ஒரு பதிவு எண்ணும், பின்னால் வேறு பதிவு எண்ணும் ஒட்டி, மோசடியாக மணல் அள்ளியது தெரிய வந்தது.லாரிகளின் உண்மையான பதிவு எண்களை கண்டுபிடித்த மரூர் போலீசார், அரசு மணல் கிடங்கு கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்ட உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியன் கொடுத்த புகார்படி, வழக்கு பதிவு, தப்பி ஓடிய லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர்.
முற்றுகை போராட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே வடுககுடி, மரூர், சாத்தனுார் ஆகிய பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றில், அரசு மணல் குவாரி அமைத்துள்ளது.குவாரியில் மணல் எடுத்துச் செல்லும் டிப்பர் லாரிகள் திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி சாலையில் வேகமாக செல்வதால் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதால், நிலத்தடி நீர், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி, கிராம மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள், நேற்று மரூரில் உள்ள மணல் சேமிப்பு கிடங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களை சமதானம் செய்தனர்.