ஊட்டி : ''கவர்னரை நெறிப்படுத்தி அவரது கடமைகளை எல்லாம் நம் முதல்வர் உணர்த்துகிறார்,'' என, ஊட்டியில் நடந்த விழாவில், எம்.பி., ராசா பேசினார்.
ஊட்டிக்கு ஜான் சல்லிவன் வந்த நுாறாவது ஆண்டு விழா, 1923 ஜூன், 1ம் தேதி நீலகிரியில் கொண்டாடப்பட்டது. அதில், பங்கேற்ற சென்னை மாகாண கவர்னராக இருந்த 'லார்ட்வெலிங்டன்', இன்னும், 100 ஆண்டுகள் கழித்து, 200வது ஆண்டு கொண்டாடும் நாள் வரும். அப்போது, எனக்கு பின்னால் ஒரு கவர்னர் வருவார்.அவர் கலந்து கொள்ளும் விழாவை நானும், என் மனைவியும் விண்ணுலகத்திலிருந்து வாழ்த்துவோம் என்று சொன்னார்.
இன்றைக்கு கவர்னர் இல்லை. இன்று கவர்னரை நெறிப்படுத்தி, அவர் செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் உணர்த்துகின்ற நம் முதல்வர் வந்துள்ளார். ஜான் சல்லிவன் சிலையை திறந்து வைத்து அமர்ந்துள்ள முதல்வரை, லார்ட்வெலிங்டன் மற்றும் அவரது மனைவியும் வாழ்த்துவர்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தொழில்நுட்ப பூங்கா!
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில்,''ஊட்டியில், 4,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், ஒரு தொழிற்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும். குன்னுாரில் ஒரு அரசு கல்லுாரி அமைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள நகராட்சி மார்க்கெட் பகுதி, 60 கோடி ரூபாயில் புனரமைக்கப்படும்,'' என்றார்.
தேயிலைக்கு விலை
ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ் பேசுகையில்,''நீலகிரியில் தேயிலைக்கு நிரந்தர விலையில்லாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். அவர்களின் பிரச்னைகளை தீர்க்கும் வகையில், பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு, 35 ரூபாய் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊட்டி எச்.பி.எப்., தொழிற்சாலையில், அலோபதி, ஆயுர்வேதா மருந்து உற்பத்தி செய்ய வேண்டும். ஊட்டியில் 'மல்டி லெவல் பார்க்கிங்' தளம் அமைக்க வேண்டும்,'' என்றார்.