கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டியுள்ள மலை தொடரின், ஏழாவது மலை உச்சியில், சுயம்பு வடிவில் உள்ள ஈசனை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று(மே22) அதிகாலை வந்தார்.
கோவிலில், சுவாமி தரிசனம் முடித்தபின், கோவிலில் பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அதன்பின், ஏழு மலைகள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில், மலைப்பாதை அமைப்பது குறித்த சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்தும், மலைப்பாதையில் மேம்படுத்தப்பட வேண்டிய வசதிகள் குறித்தும், மலை ஏறி ஆய்வு செய்தார். ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.