திருமங்கலம் : திருமங்கலத்திலுள்ள தனியார் மாலில், அனுமதியின்றி நடத்தப்பட்ட கேளிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்ற மென்பொறியாளர், அதீத போதையால் உயிரிழந்தார்.சென்னை திருமங்கலத்திலுள்ள பிரபல 'மால்' ஒன்றில், அனுமதியின்றி கேளிக்கை நிகழ்ச்சி மற்றும் மதுபானங்கள் வினியோகம் செய்யப்படுவதாக, அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு, நேற்று முன்தினம் இரவு துவங்கி, விடிய விடிய மது விருந்து நிகழ்ச்சி நடந்துள்ளது.இதற்காக, தனி செயலி வாயிலாக, 1,500 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண், பெண் என, 900 இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.பிரேசில் நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற மந்த்ரா கோரா என்பவரின் ஆடல், பாடலுடன் நிகழ்ச்சி நடந்துஉள்ளது.இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், மாலில் கூடியிருந்தவர்களை வெளியேற்றி, மூன்றாவது மாடியிலுள்ள மதுபான பாரை சோதனை செய்த போது, உரிமமின்றி செயல்பட்டு வந்தது தெரிந்தது.இதையடுத்து, பாரில் இருந்த 844 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.இந்த மது விருந்தில் பங்கேற்ற சென்னை, மடிப்பாக்கம் ஜோதி ராமலிங்கம் தெருவைச் சேர்ந்த பிரவீன், 23, என்பவர், தன் நண்பர்களான நீக்கல், ஐஸ்வர் ஆகியோருடன் சேர்ந்து, பாடலுக்கு தகுந்தவாறு ஆட்டம் போட்டுள்ளார்.அப்போது, திடீரென மயங்கி விழுந்துள்ளார்.உடனே, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் அதிக அளவு மது அருந்தி இருந்ததால், மேல் சிகிச்சைக்காக, சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று, பிரவீன் உயிரிழந்தார். இதுகுறித்து, திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.