செஞ்சி,-பட்டு கூடு விலை சரிபாதியாக வீழ்ச்சி அடைந்ததால், பட்டுப் பூச்சி வளர்க்கும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.பட்டு உற்பத்தியில் உலக அளவில் சீனா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாமிடத்திலும் உள்ளது. இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பட்டுப் பூச்சி வளர்ப்பிற்கு முக்கிய ஆதாரமாக மல்பெரி தாவரத்தின் இலைகள் உள்ளன. தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 57,472 ஏக்கர் பரப்பளவில் மல்பேரி சாகுபடி செய்கின்றனர்.ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் 1,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுப் பூச்சி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.ஒரு ஏக்கரில் விளையும் மல்பெரியில் இருந்து 100 இளம்புழுக்களை வளர்க்கின்றனர். நாள் ஒன்றுக்கு 400 முதல் 500 கிலோ இலைகளை பட்டுப் பூச்சிகளுக்கு உணவாக கொடுக்கின்றனர். இதற்கு ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம் வரை செலவு செய்கின்றனர்.ஒரு ஏக்கரில் 75 முதல் 85 கிலோ வரை பட்டு கூடு கிடைக்கிறது. பட்டு கூடுகளை ஆந்திர மாநிலம் பலமனேரியிலும், தமிழகத்தில் தர்மபுரியிலும் விவசாயிகள் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.தர்மபுரியில் குறைந்த அளவு வியாபாரிகள் வருவதால் போதிய விலை கிடைப்பதில்லை. இதனால் பலமனேரிக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.மூன்று மாதம் முன் ரூ.800 முதல் 900 விரை விலை போன ஒரு கிலோ பட்டுக்கூடு தற்போது ரூ. 450 ஆக விலை சரிந்துள்ளது. இதனால், இதுவரை பட்டு வளர்ப்பில் சீரான வருவாய் பெற்று வந்த விவசாயிகளுக்கு திடீர் விலை சரிவு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.மேலும், பட்டுக் கூடு விற்பனைக்காக ஆந்திர மாநிலம் பலமனேரிக்கு சென்று வர கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதனால் எதிர்வரும் காலத்தில் பட்டுக் கூடு வளர்ப்பை தொடர முடியுமா என்ற சந்தேகம் விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.இவர்கள், விழுப்புரம் மாவட்டத்தில் பட்டு உற்பத்தியை பாதுகாக்க விழுப்புரத்தில் பட்டு வளர்ச்சித்துறை மூலம் பட்டு விற்பனை மையம் துவங்க வேண்டும். அதில் வெளிமாநில வியாபாரிகள் கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். பட்டுக் கூட்டிற்கு தமிழக அரசு குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.மேலும், ஆந்திர அரசு பட்டு விவசாயிகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.50 மானியம் வழங்குவதை போல் தமிழக அரசும் மானியம் வழங்க வேண்டும். பிற விவசாயத்திற்கு வழங்குவதுபோல், பட்டுக்கூடு வளர்ப்பிற்கும் கடன் மற்றும் இடுபொருட்கள் மானிய விலையில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.