விழுப்புரம்,-தமிழகத்தில் இன்று துவங்கப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் 279 ஊராட்சிகளில் செயல்படுத்த ரூ.1.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் விவசாயிகளின் நலன் சார்ந்த அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற பெருந்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
முதல்வர் துவக்கி வைப்பு
இத்திட்டத்தை தமிழக முதல்வர் இன்று 23ம் தேதி காணொலி மூலம் 1,997 ஊராட்சிகளில் துவக்கி வைக்கிறார். அதில், விழுப்புரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக 96 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஒருங்கிணையும் துறைகள்
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, பால்வளம், கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நீர்வள ஆதாரத்துறை, தமிழ்நாடு காதி மற்றும் கிராமதொழில் வாரியம் மற்றும் மின் வாரியம் உள்ளிட்ட துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படும்.
இந்தாண்டில் 279 ஊராட்சி
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 688 ஊராட்சிகளிலும் 5 ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை மூலம் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில் செயல்படுத்த 2021--22ம் ஆண்டிற்கு முதற்கட்டமாக 96 ஊராட்சிகளிலும், 2021--22ம் ஆண்டில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 40 ஊராட்சிகள் மற்றும் 2022--23ம் ஆண்டில் 143 ஊராட்சிகள் என மொத்தம் 279 ஊராட்சிகளில் நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ளது.
திட்டத்தின் நோக்கம்
இத்திட்டத்தின் மூலம் கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரிய பம்பு செட்டுகள் அமைத்தல், வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்டுத்துதல், நுண்ணீர் பாசன முறையினை பின்பற்றுதல், சமுதாய காடுகள் உருவாக்குதல், கால்நடைகளின் நலன் காத்து பால் உற்பத்தியை பெருக்குதல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் கடன் வழங்குதல், வருவாய் துறை மூலம் நிலப்பட்டா மாறுதல் வழங்குதல், நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறைகளின் மூலம் ஏரி, குளங்களை துார்வாருதல் உள்ளிட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தப்படும்.
மானியத்தில் விதை
வேளாண் துறை மூலம் கிராம ஊராட்சிகளில் தலா ஒரு பண்ணை குடும்பத்திற்கு 3 நெட்டை தென்னங்கன்றுகள் வீதம் 200 பண்ணை குடும்பங்களுக்கு நுாறு சதவீத மானிய விலையிலும், வரப்பு பயிர் சாகுபடி செய்ய 15 எக்டேர் பரப்பளவிற்கு எக்டேருக்கு 5 கிலோ வீதம் உளுந்து விதை 75 சதவீத மானிய விலையிலும், கை மற்றும் விசைத்தெளிப்பான்கள் 5 பேருக்கு ரூ.750- மற்றும் ரூ.2500- மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. இதற்காக மாவட்டத்திற்கு ரூ.56.39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டு தோட்டம்
தோட்டக்கலைத்துறை மூலம் ஊராட்சிகளில் வீட்டு தோட்டம் அமைக்க காய்கறி விதை தொகுப்பு 125 நபர்களுக்கு 75 சதவீத மானிய விலையிலும், வரப்பு ஓரங்களில் 8 வித பழ மரங்கள் மற்றும் இதர மரக்கன்றுகள் 50 நுாறு சதவீத மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த எக்டேருக்கு ரூ.5000 -மதிப்பில் 2 எக்டேருக்கு இயற்கை இடுபொருட்கள் மானிய விலையிலும் வழங்கப்படுகின்றது.நெகிழி கூடைகள் மற்றும் பயிர் பாதுகாப்பு செய்ய ஏதுவாக 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டிரம் கொண்ட தொகுப்பு 10 பேருக்கு 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. இதற்காக மாவட்டத்திற்கு ரூ.29.84 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆழ்குழாய் கிணறு
வேளாண் பொறியியல் துறை மூலம் நான்கு விவசாயிகளின் தரிசு நிலங்களில் ரூ. 44 லட்சம் செலவில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, மின்மோட்டார் பொருத்தி பாசன வசதி ஏற்படுத்தப்படும். மேலும், தலா ஒரு லட்சம் செலவில் 5 பண்ணை குட்டைகள் நுாறு சதவீத மானியத்தில் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டங்களுக்காக ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.