பல்லடம்:பஞ்சு, நுால் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில், ஜவுளி உற்பத்தியாளர்கள்,15 நாள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை நேற்று துவங்கினர்.பஞ்சு பதுக்கல், ஏற்றுமதி உள்ளிட்டவற்றால், உள்நாட்டுக்கு தேவையான பஞ்சு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பாக அடுக்கடுக்கான குறைகளையும் தொழில்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
பருத்தி விவசாயம் சிக்கல்
விவசாயத்துக்கு தண்ணீர் முக்கிய தேவையாக உள்ளது. பருவ மழையையும், பி.ஏ.பி., உள்ளிட்ட பாசன திட்டங்களையும் எதிர்பார்த்து திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தண்ணீருக்காக தவம் இருக்க வேண்டிய நிலை உள்ளது. தொழில்நுட்பங்கள் அதிகரித்த போதும், விவசாயத்துக்கு கூலி தொழிலாளர்களின் பங்களிப்பு என்பது அவசியம்.விவசாய தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் பலர், நுாறு நாள் திட்ட பணிக்கு சென்றதால், விவசாயத்துக்கு கடுமையான ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்கின்றனர் விவசாயிகள். போதிய தண்ணீர் கிடைக்காமல், கூலி தொழிலாளர்களும் இல்லாததால், விவசாயிகள் சாகுபடி பரப்பளவை குறைத்துக் கொண்டனர். பற்றாக்குறைக்கு, விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டதால், பாசனப் பரப்பளவு குறைந்து வருகிறது.விவசாயிகள் கூறியதாவது:உரம், உழவு உள்ளிட்டவற்றுக்கு மானியம் வழங்கும் மத்திய, மாநில அரசுகள், விவசாயிகளின் பிரதான தேவைகளை மறந்துவிட்டனர். இதன் விளைவாக, கடந்த காலத்தில் பருத்தி விளைச்சலுக்கு பெயர் பெற்ற கொங்கு மண்டலத்தில், இன்று விரல் விட்டு எண்ணும் அளவுக்கே பருத்தி சாகுபடி நடக்கிறது.பருத்தி உற்பத்தியில், இந்திய அளவில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழகம் 9வது இடத்திலும் உள்ளன. பிற மாநிலங்களில் காரீப் சீசனில் மட்டுமே பருத்தி உற்பத்தி ஆகிறது. ஆனால், தமிழகத்தில் காரீப், ரபி என, இரண்டு சீசன்களிலும் சாகுபடியாகும்.இருந்தும், பருத்தி உற்பத்தியில் தமிழகம் பின்தங்கியிருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. பருத்தி சாகுபடி படிப்படியாக குறைந்து வந்தும், அதுகுறித்த புள்ளிவிவரம் அரசு துறைகளிடம் கிடையாது.உரிய திட்டமிடல் இல்லாததால், பருத்தி உற்பத்தியில் கொடிகட்டிப் பறந்து வந்த நம் நாடு, இன்று வெளிநாட்டு பஞ்சை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.துணி உற்பத்திக்கு பருத்தி ஆதாரமாக இருப்பதால், பருத்தியை அத்தியாவசிய தேவைகளின் பட்டியலில் கொண்டுவர வேண்டும் என்றகருத்தும் நிலவுகிறது. பஞ்சு மற்றும் துணி உற்பத்தியை பெருக்க மத்திய மாநில அரசுகள், விவசாயிகள், தொழில் துறையினரை ஊக்கப்படுத்த வேண்டும்.ஜவுளி உற்பத்தியாளர்கள் சிலர் கூறுகையில், 'சமீப காலமாக, துணி உற்பத்தி தொழில் பின்னடைவை சந்தித்து வருகிறது. உதாரணமாக, 10 ஆயிரம் கிலோ துணி உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனம் ஒன்றுக்கு, அன்று, 17.50 லட்சம் ரூபாய் முதலீடு தேவைப்பட்டது.இன்று, அதே அளவு உற்பத்தி மேற்கொள்ள, 22.50 லட்சம் ரூபாய் முதலீடு தேவை. மத்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கையால், வங்கி வட்டி வீதம், 3 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஆனால், அன்றைய முதலீட்டின் படி, 17.50 லட்சம் ரூபாய்க்கு, 1.83 லட்சம் ரூபாய் வட்டி இருந்தது.தற்போதைய முதலீட்டை கணக்கிட்டால், 22.50 லட்சம் ரூபாய்க்கு 2.80 லட்சம் ரூபாய் வட்டி செலுத்த வேண்டும். உற்பத்தி மாறாத நிலையில், 96 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வட்டி கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை உள்ளது.இதேபோல், ஜி.எஸ்.டி., அன்று, 87,500 ரூபாய் ஆகவும், இன்று, 2 லட்சம் ரூபாயாகவும் உள்ளது. இதன் காரணமாக, தொழில்துறையினர் செலுத்திய முதலீடு கரையும் அபாயம் ஏற்பட்டு வருகிறது'' என்றார்.இவ்வாறு, பருத்தி உற்பத்தியில் கவனம் செலுத்தாதது, ஆள் பற்றாக்குறை, தண்ணீர் தட்டுப்பாடு, உரிய திட்டமிடல் இல்லாதது என, தொழில்துறையினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.பஞ்சு பதுக்கலை கட்டுப்படுத்துவதுடன், பஞ்சு ஏற்றுமதியை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இது குறித்து, மத்திய, மாநில அமைச்சர்கள், துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்தும், பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.இருந்தும், பலலட்சம் தொழிலாளர்கள், மற்றும் மில்லியனில் வருவாயை அள்ளித்தரும் துணி உற்பத்தி சார்ந்த தொழிலை மத்திய,மாநில அரசுகள் கண்டு கொள்ளாதது வேதனை அளிப்பதாக தொழில்துறையினர் கவலைதெரிவிக்கின்றனர்.