திருப்பூர்:சட்டவிரோத மது விற்பனை நடந்த மதுக்கடை பாரை பா.ஜ., வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இடுவாய் கிராமத்தில் 'டாஸ்மாக்' மதுக்கடை (எண்:2300) செயல்பட்டு வருகிறது. கடையையொட்டி பார் செயல்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கடையால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.பாரில் சட்டவிரோதமாக மதுபாட்டில் பதுக்கி வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் விற்கப்படுகிறது.
கடையை அகற்ற வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் மற்றும் கிராம சபை கூட்டத்தில் மனு அளித்து இருந்தனர்.நேற்று காலை 'டாஸ்மாக்' பாரில் மதுபாட்டில் விற்கப்பட்டு வந்தது. 'குடி'மகன்கள் கடை முன்பு திரண்டு இருந்தனர். இதையறிந்த, திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., தெற்கு ஒன்றிய தலைவர் மகேந்திரன் தலைமையில் பா.ஜ.,வினர் பாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.'குடி'மகன்கள் விரைந்து வெளியேறினர். சட்டவிரோத மதுவிற்பனை குறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் பா.ஜ.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டு மதுக்கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.அங்கு வந்த மங்கலம் போலீசார், பாரில் பதுக்கி வைக்கப்பட்ட, 36 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, மதுரையைசேர்ந்த பாலமுருகன், 28, சிவகங்கையை சேர்ந்த வெற்றி ஆனந்த், 31ஆகியோரை கைது செய்தனர்.
வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் கூறுகையில், ''அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மது விற்பனை செய்து வருகின்றனர். சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்வதை தடுப்பதோடு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்பு பகுதியில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடையால், மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கடையை அகற்ற வேண்டும்.மூன்று கிராம சபை கூட்டத்தில், மதுக்கடையை அகற்ற வேண்டும் என, இரண்டு முறை மனு கொடுத்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் உடனடியாக கடையை அகற்ற வேண்டும். இல்லையென்றால், போராட்டம் நடத்துவோம்'' என்றனர்.