விருதுநகர்:விஷப்பூச்சிகளின் புகலிடமாக உள்ள புதர்மண்டிய பூங்கா, பயன்பாடின்றி கிடக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டி, சொந்த கட்டடத்திற்காக ஏங்கும் ரேஷன் கடை என பல்வேறு பிரச்னைகளில் தவிக்கின்றனர் விருதுநகர் நகராட்சி 13வது வார்டு பகுதியினர்.
இந்த வார்டில் முத்து தெரு, சின்ன பள்ளிவாசல் தெரு, எஸ்.எம்.ஜி பள்ளி தெரு, ரயில்வே பீடர் ரோடு, ராமச்சந்திரன் தெரு உள்ளிட்ட 6 தெருக்கள் உள்ளன. 10க்கும் மேற்பட்ட தெருக்களுக்கு சேர்த்து ஒரே ஒரு ரேஷன் கடை தான் உள்ளது. இதனால் எப்போதும் அதிக கூட்டம் காணப்படுகிறது. வாடகை கட்டடத்தில் தான் இயங்கி வருகிறது. இதை சொந்த கட்டடத்திற்கு மாற்ற வேண்டும்.
ராமச்சந்திரன் தெருவில் மேல்நிலை குடிநீர் தொட்டி காட்சிப் பொருளாக மட்டுமே காணப்படுகிறது. இதனை புனரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் 3 நாட்களுக்கு ஒரு முறை மக்களுக்கு குடிநீர் வழங்கலாம். தற்போது 10 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது.
இதன் அருகில் உள்ள பூங்கா புதர்மண்டி விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறி உள்ளது. இதனால் குடியிருப்போருக்கு மிகுந்த அச்சுறுத்தலாக உள்ளது.
இதற்கு உடனடி தீர்வுகாண வேண்டும். சாமியார் கிணற்று தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தும் மக்கள் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தெருக்களில் பெயர் பலகை அமைக்க வேண்டும்.
தேவை ரோடு வசதி
ரயில்வே பீடர் ரோடு பகுதியில் 10 ஆண்டாக தெரு விளக்கு வசதி இல்லை. இதனால் தெரு நுழைவு பகுதியில் இருட்டை சாதகமாக்கி இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். எனவே அத்தியாவசியமாக தெரு விளக்கு வேண்டும். பேவர்பிளாக் ரோடு வசதி வேண்டும்.
- பாலமுருகன், ஓய்வு அரசு அதிகாரி.
பூங்காவை சீரமைக்கணும்
ராமச்சந்திரன் தெருவில் தாமிரபரணி குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் வழங்க வேண்டும். குழாய் தடம் ரயில்வே லைனை கடக்க வேண்டியுள்ளதால் சிரமம் உள்ளதாக கூறுகின்றனர். பூங்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு கேமரா பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
- காமராஜ், வியாபாரி.
நுாலகம் தேவை
இப்பகுதி பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் நுாலகம் இல்லை. இதனால் குழந்தைகள் எங்கு சென்று நேரத்தை பயனுள்ளதாக்குவது என திணறுகின்றனர். ரேஷன் கடைக்கு பல தெருக்களை சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதனால் முதியோர் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
- சரஸ்வதி, குடும்பத்தலைவி.
நடவடிக்கை எடுக்கப்படுகிறது
பூங்காவில் மாஸ் கிளீனிங் செய்ய நகராட்சி தலைவரிடம் மனு அளித்துள்ளோம். விரைவில் சுத்தப்படுத்தும் பணி நடைபெறும். எம்.எல்.ஏ., நிதியில் இருந்து ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் விரைவில் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வார்டில் தெருவிளக்குகள் சரி செய்யும் பணி உடனுக்குடன் நடக்கிறது.
- முத்துலட்சுமி, நகராட்சி கவுன்சிலர்.