உடுமலை;திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த, 17,437 பேர், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின், குரூப் -2 தேர்வு எழுதினர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், குரூப் -2 மற்றும் குரூப்- 2ஏ தேர்வுகள் நேற்றுமுன்தினம் நடந்தன.திருப்பூர் மாவட்டத்தில், 21 ஆயிரத்து, 39 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, 12 கல்லுாரிகள், 43 பள்ளிகள் என, 57 மையங்களில் போட்டித்தேர்வு நடந்தது.
தேர்வு பணிகளை கண்காணிக்க, 20 பறக்கும் படைகள், 44 'மொபைல்' ஆய்வுக்குழு அமைக்கப்பட்டிருந்தது. ஆய்வு அலுவலராக, 120 வருவாய் ஆய்வாளர் நியமிக்கப்பட்டிருந்தனர்.பழனியம்மாள் பள்ளி, குமரன் கல்லுாரியில், கண் பார்வையற்ற இருவர், தேர்வு எழுதினர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நிலை பாதித்தவர்கள் என, 26 பேர், உதவியாளரை கொண்டு தேர்வு எழுதினர்.உடுமலை பகுதியில், தேர்வு மையம் இல்லாததால், தேர்வு எழுதியவர்கள், தாராபுரம் சுற்றுப்பகுதிக்கு செல்ல நேரிட்டது. திருப்பூர் வடக்கில் - 9,726 பேர் விண்ணப்பித்திருந்தனர்; 7,919 பேர் எழுதினர்.திருப்பூர் தெற்கில், 6,415 பேர் விண்ணப்பித்திருந்தனர்; 5,370 பேர் தேர்வு எழுதினர்.
தாரா புரத்தில், 4,898 பேர் விண்ணப்பித்திருந்தனர்; 4,148 பேர் தேர்வு எழுதினர்.மாவட்ட அளவில், 21 ஆயிரத்து, 39 பேர் தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருந்தனர்; தகுதியானவருக்கு, 'ஹால்'டிக்கெட்' வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், 17 ஆயிரத்து, 437 பேர் (82.88 சதவீதம்) நேற்று தேர்வு எழுதினர்; 3 ஆயிரத்து 602 பேர் தேர்வுக்கு வரவில்லை.தேர்வு மையங்களில் இருந்து, விடைத்தாள்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.