உடுமலை:கடந்த இரு மாதங்களாக, உடுமலை அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சைக்கு எவரும் வராததால், சுகாதாரத் துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், இம்மாதம், 7ம் தேதி, 291 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இருப்பினும், ஆரோக்கியமாக இருந்ததால், அன்றைய தினமே அவர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.
இதையடுத்து, கடந்த, 8 முதல், 18ம் தேதி வரையிலான பத்து நாட்களில் திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த, 2,179 பேர் பல்வேறு பகுதியில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்; இவர்களில் ஒருவருக்கு கூட தொற்று உறுதியாகவில்லை. நாள் ஒன்றுக்கு, 150 முதல், 300 பேர் வரை பரிசோதனை செய்து கொள்கின்றனர்.இருப்பினும், யாருக்கும் கொரோனா உறுதியாவதில்லை. நோய் தொற்று பரவல் பூஜ்ஜியம் என்ற நிலையில் தொடர்கிறது. இதனால், மாவட்ட சுகாதாரத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.தவிர, உடுமலை அரசு மருத்துவமனையில், கடந்த இரு மாதங்களாக, எவரும் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவில்லை.
மருத்துவப்பணிகள் துறையினர் கூறியதாவது:மருத்துவமனையில், தொற்று உறுதியாகும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிர்காக்கும் நோய் தடுப்பு உபகரணங்கள் தயார் நிலையிலேயே வைக்கப்படுகின்றன.கொரோனா தொற்று மாவட்டத்தில் தொடர்ந்து இரு வாரங்களாக பூஜ்ஜியமாக பதிவு ஆகி வருகிறது. அதேநேரம், இரு மாதங்களாக, நோய் தொற்று பாதித்த எவரும் மருத்துவமனைக்கு, சிகிச்சைக்கு வரவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.