உடுமலை: உடுமலையில் ஹிந்து முன்னணி நிர்வாகியை தாக்கி கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை ஏரிப்பாளையம் விஜய நகரைச் சேர்ந்த அஸ்வின் மனைவி வளர்மதியும், அதே பகுதியில் வசித்து வந்த, ரஞ்சித் மனைவி கவிதாவும் மகளிர் சுய உதவிக்குழு நடத்தி வந்தனர்.வளர்மதி பெயரில், கவிதா, 30 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். பணத்தை கட்டுவது குறித்து, இரு தரப்புக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
ஆனால், கடன் வாங்கிய தொகையை செலுத்தாமல், சொந்த ஊரான திருநெல்வேலி செல்ல, கவிதா, ரஞ்சித் திட்டமிட்டுள்ளனர். பிரச்னை உள்ளதால், தங்களது ஊரிலிருந்து கூலிப்படை கும்பலை வர வழைத்துள்ளனர்.நேற்று மதியம், வீட்டை காலி செய்து, வாகனத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தனர்.
இதை பார்த்த அஸ்வின் மற்றும் அவரது நண்பரான, ஹிந்து முன்னணி உடுமலை வடக்கு நகர் பொறுப்பாளர் குமரவேல், 24 ஆகியோர், பணத்தை கொடுத்து விட்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.இதில், இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென ரஞ்சித் மற்றும் அவர்களுடன் இருந்த ஆறு பேர் கொண்ட கும்பல், அரிவாள், கத்தி, இரும்பு ராடு ஆகியவற்றால், குமரவேல், அஸ்வின் ஆகியோரை கடுமையாக தாக்கினர்.
இதில், பலத்த காயமடைந்த குமரவேல் உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். அஸ்வின் சிகிச்சை பெற்று வருகிறார்.கொலை செய்த கும்பல் காரில் தப்பினர். பல்லடம் அருகே கும்பலை பிடித்து, உடுமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.