சென்னை: 'மத்திய அரசு குறைத்தது போல், மாநில வரியில் பெட்ரோலுக்கு 10 ரூபாயும், டீசலுக்கு 9 ரூபாயும் தமிழக அரசு உடனே குறைக்க வேண்டும்' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார். அவரது அறிக்கை:மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க, மத்திய கலால் வரியை, இதுவரை இரண்டு முறை குறைத்துள்ளது.
அதன்படி, மாநில அரசுகளும் வரியை குறைக்க, மத்திய அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து, 25 மாநிலங்கள், பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைத்தன. ஆனால், தமிழக அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரியை குறைக்காமல், தன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, மத்திய அரசு விலையை குறைக்க கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தின.
தொடர்ந்து, மத்திய அரசு இரண்டாவது முறையாக, மத்திய கலால் வரியை குறைத்துள்ளது. இதனால், அனைத்து பொருட்களின் விலையும் குறையும். சிறு வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள் என, அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பயனடைவர்.
இனிமேலாவது, மக்களுடைய பிரச்னையை உணர்ந்து, மற்ற மாநிலங்களை போல், பெட்ரோல் மற்றும் டீசல் விலையக் குறைத்து, அனைத்து தரப்பினரின் நலனையும், தி.மு.க., அரசு காக்க வேண்டும்.தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற, மாநில வரியில் பெட்ரோலுக்கு 10 ரூபாயும், டீசலுக்கு 9 ரூபாயும் உடனே குறைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.