திருப்பூர் : திருப்பூரில் சாயக்கழிவு உப்புகளை அகற்றுவதற்கான ஆராய்ச்சியை தமிழக அரசு அமைத்துள்ள வல்லுனர் குழு துவங்கியது.
மாநிலம் முழுவதும் பல்வேறு நகரங்களில் தேங்கியுள்ள கழிவு உப்புகளை அகற்றுவதற்கான தொழில்நுட்பம் கண்டறிய, மத்திய தோல் ஆராய்ச்சி பயிற்சி மைய விஞ்ஞானி சண்முகம் தலைமையில், வல்லுனர்கள் 10 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன் கூறியதாவது:
கழிவு உப்பு தேக்கத்தால், திருப்பூரில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்துவருகின்றன. உப்பை பாதுகாக்க தனியே செலவிட வேண்டியுள்ளது; பெருமளவு இடத்தை கழிவு உப்பு ஆக்கிரமித்துக்கொள்கிறது. சுத்திகரிப்பு மையங்களில், வேறு விரிவாக்க பணி மேற்கொள்ள முடிவதில்லை.அரசு அமைத்துள்ள வல்லுனர் குழுவினர், கழிவு உப்பு அப்புறப்படுத்தும் சிறந்த வழிமுறைகள் குறித்து ஆராய்ச்சிகளை துவக்கியுள்ளனர். திருப்பூர் சுத்திகரிப்பு மையங்களில் தேங்கியுள்ள, 45 ஆயிரம் டன் கழிவு உப்பு விரைந்து அகற்றப்படும்; 10 ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.