பாலம் கட்டமைப்புக்காக, குழி தோண்டியபோது குழாய் உடைந்ததால், கோபி நகராட்சி மக்களுக்கு, சீரான குடிநீர் கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
கோபி நகராட்சி மக்களுக்கு, சீரான குடிநீர் வழக்கும் வகையில், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தில், 52.80 கோடி ரூபாயில் குடிநீர் திட்டப்பணி, 2019 முதல் நடக்கிறது.
செங்கலரை தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வரும், மூன்று பைப் லைன் களுக்கு பதிலாக, ஒரே பைப் லைனில், மேல்நிலை தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படவுள்ளது. இதனால் முன்பிருந்த, 300 மி.மீ., அளவு சிமென்ட் பைப் லைனை அகற்றி, இரும்பு பைப்புகள் புதைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ல.கள்ளிப்பட்டி அருகே, சத்தி பிரதான சாலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், பாலம் கட்ட நேற்று முன்தினம் குழிபறித்தனர். அப்போது குடிநீர் பைப் லைன் உடைந்தது. இதனால் வரும் நாட்களில், கோபி நகராட்சி மக்களுக்கு சீரான குடிநீர் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிரதான பைப் லைன் உடையவில்லை. கூடுதலாக உள்ள இணைப்பு தான் உடைந்துள்ளது. அதனால், குடிநீர் விநியோகம் எந்த விதித்திலும் பாதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.