தமிழக காங்., தலைவர்கள் பதவி மோகத்தை உதறி விட்டு, தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேற, த.மா.கா., அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து த.மா.கா., இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முன்னாள் பிரதமர் கொலை வழக்கில், தண்டனை பெற்றவரை, தமிழக முதல்வர் கட்டியணைத்து வரவேற்றது நெஞ்சை பிளக்கும் செயலாக உள்ளது.
ராஜீவ் நினைவு தினத்தை அனுசரித்த தினத்தில், அவரை கொன்ற கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பாக, வீடியோ கான்ப்ரன்சிங்கில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டிய அவசியம் என்ன? கொலை குற்றவாளியை தமிழக முதல்வர் கட்டியணைத்து, பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தியதன் விளைவாக, தாராபுரம்
பகுதியில் இனிப்பு வழங்கியும், கேக் வெட்டியும் கொண்டாடினர். கொலை குற்றவாளிக்கு மாவட்டந்தோறும் மரியாதையா?
கொலை குற்றவாளி விடுதலை மற்ற கொலையாளிகளுக்கும் முன் உதாரணம் ஆகி விடாதா? காங்., தலைவர்கள், தி.மு.க. தயவால் கிடைக்கும் எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,
பதவிக்காக, காங்., தலைவர் படுகொலை குற்றவாளிகளை விடுதலை செய்து, அதில் மகிழ்ச்சி காணும் ஒரு கூட்டணி கட்சியோடு இன்னுமா கூட்டணி தொடர்கிறது.
பதவி மோகத்தில் இருக்கும் காங்., தலைவர்கள் கூட்டணியை உதறி, உண்மையான கட்சி தொண்டனின் உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.