வைகாசி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
நாமக்கல்லில், 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி கோவிலுக்கு, நாள்தோறும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.
தினசரி சுவாமிக்கு காலை, 8:00 மணிக்கு வடைமாலை சாற்றப்படும். தொடர்ந்து மஞ்சள், நல்லெண்ணெய், சீயக்காய்த்துள், திருமஞ்சள், பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறும்.
மேலும் சுவாமிக்கு தங்க கவசம், வெள்ளி கவசம், மலர் அங்கி, முத்தங்கி, வெற்றிலை அலங்காரம் போன்ற அலங்காரங்களும் செய்யப்படுகிறது. வைகாசி மாத இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று, சுவாமிக்கு விலை உயர்ந்த முத்துக்களால் தொடுக்கப்பட்ட முத்தங்கி அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.