''ஆசைப்படலாம்; ஆனால், பேராசை படக்கூடாது. தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டுமென தெரியும்,'' என, தன் அமைச்சர் பதவி குறித்து, உதயநிதி எம்.எல்.ஏ., பேசினார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், கட்சி மூத்த நிர்வாகிகள், மாற்றுத்திறனாளிகள் என, 600 பேருக்கு பொற்கிழி வழங்கும் விழா, மாற்று கட்சியினர் இணையும் விழா, மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமையில், ஓசூரில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் காந்தி, கணேசன் முன்னிலை வகித்தனர். ஓசூர் மாநகர பொறுப்பாளரும், மேயருமான சத்யா வரவேற்றார்.
விழாவில் மூத்த நிர்வாகிகளுக்கு, பொற்கிழி வழங்கி உதயநிதி எம்.எல்.ஏ., பேசியதாவது: நான் இனி எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், இதேபோல் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு, பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படும்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்துக்கும், எனக்கும் மிகப்பெரிய தொடர்பு உண்டு. கடந்த, 2019ல் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன் இல்ல திருமண விழாவில் பங்கேற்று, சென்னை சென்றேன். அப்போதுதான் தலைவர் ஸ்டாலின், என்னை மாநில இளைஞரணி செயலாளராக அறிவித்தார். கடந்த சட்டசபை தேர்தலில், ஒரு நாள் முழுவதும் பிரசாரத்தை முடித்து விட்டு சென்றேன். தற்போது எம்.எல்.ஏ.,வாக வந்திருக்கிறேன்.
இப்போது மீண்டும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்துக்கு வந்துள்ளதால், வருங்கால அமைச்சர் என்று, மாவட்ட செயலாளர் பிரகாஷ் கூறினார். ஆசைப்படலாம்; ஆனால் பேராசை படக்கூடாது. தலைவர் ஸ்டாலினுக்கு எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என தெரியும். அதற்கான அனுபவம், உழைப்பு வேண்டும். இவ்வாறு உதயநிதி பேசினார்.
தொடர்ந்து, ஓசூர் மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உதயநிதி பங்கேற்றார். முன்னதாக ஓசூர் மாநகர தி.மு.க., சார்பில் உதயநிதிக்கு, மேயர் சத்யா வீர வாள் வழங்கினார்.
நிகழ்வில் பர்கூர், எம்.எல்.ஏ., மதியழகன், முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.