காலிங்கராயன் பாசனத்தில் காய்ந்து வரும், 1,100 ஏக்கர் நெற்பயிரை காக்க, 10 நாட்களுக்கு தண்ணீர் விட வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் பாசன பகுதியில், ஆண்டுதோறும் ஏப்.,30ல் தண்ணீர் நிறுத்தப்படும். மே மாதத்தில் நெல் அறுவடை நடக்கும். நடப்பாடு, அறுவடை தாமதமாகி உள்ளது. வயல் வெளிகளில் தற்போது காய்ந்து வரும் நெற்பயிர்களை காப்பாற்ற, 10 நாட்கள் தண்ணீர் தேவைப்படுவதாக, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து காலிங்கராயன் பாசன விவசாயிகள் சங்க தலைவர் ரமேஷ் கூறியதாவது: வாய்க்காலை சுத்தப்படுத்தும் பணிக்காக, 10 நாட்கள் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் தாமதமாக விவசாயிகள் நடவு மேற்கொள்ள வேண்டியதாயிற்று. ஏப்.,24ல் வாய்க்காலில் தண்ணீரை நிறுத்தி இருக்க வேண்டும். ஆனால், விவசாயிகள் கேட்டு கொண்டதால், மே, 20 வரை தண்ணீர் விடப்பட்டது.
ஆனாலும், இது போதுமானதாக இல்லை. பருவம் தப்பிய மழையால் நெற்பயிர்களில் இன்னமும் பச்சையம் நீங்கவில்லை. காய்ந்த நிலைக்கு வந்தால் தான் முழுமையாக விளைச்சல் கிடைக்கும்.
தற்போது போதிய தண்ணீர் இல்லாததால் நெற்பயிர் வாடி வருகிறது. இதற்கு, 10 நாட்கள் மட்டும் தண்ணீர் வினியோகித்தால் போதும்.
தற்போது பவானி ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீரை, காலிங்கராயன் வாய்க்காலில் வெளியேற செய்தாலே போதுமானது. வாய்க்காலில் குறிப்பிட்ட பகுதி வரை மட்டுமே நெற்பயிர்களை பயிரிட்டுள்ளனர்.
எனவே அதுவரை உள்ள பகுதிக்கு மட்டுமே நீர் தேவை. பிற பகுதிகளில் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை அரசு மேற்கொள்ளலாம்.
வாய்க்கால் பராமரிப்பு என்ற பெயரில் பிப்.,20 முதல் மார்ச் முதல் வாரம் வரை, தண்ணீரை நிறுத்தியதே நெல் அறுவடை துவங்காமல் இருப்பதற்கு பிரதான காரணம்.
குறிப்பாக பி.பெ.அக்ரஹாரம், வைராபாளையம், கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 1,100 ஏக்கர் நெற்பயிர் போதிய நீரின்றி காய்ந்து வருகிறது. இதுவரை, 10 ஏக்கர் பரப்பில் மட்டுமே நெல் அறுவடை நடந்துள்ளது. காயும் பயிர்களுக்கு, 10 நாட்கள் மட்டுமே நீர் தேவை.
இதுகுறித்து ஏற்கனவே வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, கலெக்டர், பொதுப்பணி துறை நீர் வள பிரிவு அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். ஆனால், இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.