பாப்பாரப்பட்டி அருகே, கன்றுக்குட்டிகளை சூன்யம் வைத்து கொன்று விட்டதாக கூறி, அண்ணனை தம்பி வெட்டிக்கொலை செய்தார். தடுத்த அண்ணிக்கும் வெட்டு விழுந்ததில், படுகாயம் அடைந்தார்.
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள சக்கிலிநத்தத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 45, கரும்பு வெட்டும் தொழிலாளி; கோவை, ஈரோடு பகுதிகளில் கரும்பு வெட்டி வந்தார். இவரது தம்பி குமார், 40; விவசாயம் செய்து வருகிறார். குமார் வளர்த்து வந்த இரண்டு மாட்டுக்கன்றுகள் சமீபத்தில் இறந்தன. இதற்கு அண்ணனும், அண்ணியும் செய்வினை செய்ததே காரணம் எனக்கூறி, குமார் தகராறு செய்து வந்தார்.
நேற்று மாலை, அண்ணன் வெங்கடேசன் மற்றும் அண்ணி பெருமா, 35, ஆகியோரிடம், என் மாட்டை செய்வினை வைத்து கொன்று விட்டீர்கள் எனக்கூறி, வெங்கடேசனின் தலை மற்றும் கழுத்தில், அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் அவர் இறந்தார். தடுத்த அண்ணியையும் தாறுமாறாக வெட்டினார். படுகாயமடைந்த பெருமா, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பென்னாகரம் டி.எஸ்.பி., சவுந்திரராஜன் மற்றும் பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். கொலை செய்து தலைமறைவான குமாரை தேடி வருகின்றனர்.