தொழிலாளியை கொல்ல முயற்சி
நண்பருக்கு போலீஸ் வலை
ஓசூர், மே 23-
தொழிலாளியை அடித்து கொல்ல முயன்ற அவரது நண்பரை, போலீசார் தேடி வருகின்றனர். தேன்கனிக்கோட்டை தாலுகா, அரசகுப்பம் அடுத்த பென்சுப்பள்ளியை சேர்ந்தவர்கள் திம்மராஜ், 32, கூலித்தொழிலாளி; இவரது நண்பர் சுதாகர், 30; அருகருகே வசிக்கின்றனர். திம்மராஜ் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, சுதாகர் வீட்டின் முன் அவருடன் பேசி கொண்டிருந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுதாகர், இரும்பு கம்பியால் திம்மராஜின் தலையில் தாக்கினார். படுகாயமடைந்த அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, திம்மராஜ் மனைவி சுதாராணி, 27, புகார்படி, சுதாகர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிந்த தேன்கனிக்கோட்டை போலீசார், அவரை தேடி வருகின்றனர்.
12,820 மாற்றுத்திறனாளிகளுக்கு
ரூ.15.25 கோடி நலத்திட்ட உதவி
தர்மபுரி, மே 23-
மாவட்டத்திலுள்ள, 12 ஆயிரத்து, 820 மாற்றுத்திறனாளிகளுக்கு, 15.25 கோடி ரூபாயில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட தர்மபுரி கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை துறை சார்பாக, 1,401 பேருக்கு தேசிய அடையாள அட்டை, 4,129 பேருக்கு தனித்துவமான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கடுமையாக பாதித்தோருக்கு பராமரிப்பு உதவித்தொகையாக, 1,053 பேருக்கு மாதந்தோறும், 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மனவளர்ச்சி குன்றியோருக்கு நிதியுதவி திட்டத்தில், 4,318 பேருக்கு மாதந்தோறும் தலா, 2,000 ரூபாய் உட்பட, மாவட்டத்திலுள்ள, 12 ஆயிரத்து, 820 மாற்றுத்திறனாளிகளுக்கு, 15.25 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து
17 ஆயிரம் கன அடியாக சரிவு
ஒகேனக்கல், மே 23-
ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை
வினாடிக்கு, 17 ஆயிரம் கன அடியாக சரிந்தது.
ஒகேனக்கல் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் மழை குறைந்து, ஒகேனக்கல் காவிரியாற்றுக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. தமிழக எல்லை
பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு
வினாடிக்கு, 25 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 17 ஆயிரம் கன அடியாக சரிந்தது.
இருப்பினும் வினாடிக்கு, 15 ஆயிரம் கன அடிக்கும் மேல்
நீர்வரத்தால், ஐந்தருவி, ஐவர்பாணி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர்ந்து, ஐந்தாவது நாளாக பரிசல் இயக்க, குளிக்க
தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை நீடிக்கப்பட்டுள்ளது.