சிலம்பம் நடுவர்களுக்கு
நாமக்கல்லில் பயிற்சி
நாமக்கல், மே 23-
நாமக்கல்லில், தமிழ்நாடு சிலம்பம் சங்கத்தின் சார்பில்,
நேற்று சிலம்பம் நடுவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
நாமக்கல் கவீன் கி ேஷார் மண்டபத்தில் நடந்த முகாமுக்கு, சங்கத்தின் மாநில தலைவர் சந்திரமோகன் தலைமை வகித்தார். இதில், 34 மாவட்டங்களில் இருந்து, 136 சிலம்பம் நடுவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு, சிலம்பம் போட்டியை எவ்வாறு நடத்துவது, எவ்வாறு பயிற்சி அளிப்பது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்வு நடத்தப்பட்டு, மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்சி முகாமில், சங்கத்தின் மாநில செயல் தலைவர் பொன்ராமர்,
துணைத் தலைவர் கண்ணதாசன், பொதுச்செயலாளர்
துாயமணி, பொருளாளர் கார்த்திகேயன் மற்றும்
மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
அரசு கல்லுாரி மாணவர்கள்
22 ஆண்டுக்கு பின் சந்திப்பு
ராசிபுரம், மே 23-
ராசிபுரம் அடுத்த ஆண்டகலுார் கேட்டில் உள்ள, அரசு திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கடந்த, 2000-மாவது ஆண்டு, அரசியல் அறிவியல் துறை மற்றும் வரலாற்று துறைகளில் படித்த மாணவர்கள், 22 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, அரசியல் அறிவியல் துறைத்தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் ஜெயசீலன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கல்லுாரியின் ஓய்வு பெற்ற அரசியல் அறிவியல் துறைத்தலைவர் பாலகிருஷ்ணன் பங்கேற்றார். முன்னாள் மாணவர்கள் தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். வந்திருந்தவர்கள் நீதித்துறை, போலீஸ் துறை, கல்வித்துறை உள்பட, பல்வேறு துறைகளில் பணியாற்றி வருபவர்கள். இதற்கான ஏற்பாடுகளை, முன்னாள் மாணவர்கள், உதவி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
நாமக்கல் ரேஷன் கடைகளுக்கு
சரக்கு ரயிலில் அரிசி வருகை
நாமக்கல், மே 23-
நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான சர்க்கரை, கோதுமை, பருப்பு, அரிசி உள்ளிட்டவைகள் உணவு பொருட்களும், அதேபோல், கோழித்தீவன அரவை ஆலைகளுக்குத் தேவையான சோயா, சோயா தவுடு, கடுகு புண்ணாக்கு, மக்காச்சோளம், சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களும், பெரும்பாலும் வடமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படும். அந்த வகையில், ரேஷன் கடைகளுக்கு தேவையான, 3,640 டன் ரேஷன் அரிசியை, தெலுங்கானா மாநிலம், சரதிநகரில் இருந்து, 58 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில், நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று வரவழைக்கப்பட்டது. அங்கிருந்து, 174 லாரிகளில் ஏற்றி, நாமக்கல் - திருசெங்கோடு சாலையில் உள்ள, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.