மணவாள நகர் : மணவாள நகர் பகுதியில், 25 ஆண்டை கடந்த காவல்துறை சிறப்பு எஸ்.ஐ.,க்கள் சந்தித்து, தங்களது நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், 1997ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், தமிழகத்தில் 5,000 முதல்நிலை காவலர்கள் பணியில் சேர்ந்தனர். அவர்கள், கடந்த மே மாதம், 1ம் தேதி, சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றனர்.
இதில், திருவள்ளூர் மாவட்டத்தில், 51 பேர் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றனர். மாவட்டத்தில், 25 ஆண்டை கடந்து, 26வது ஆண்டில் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று பணியை தொடரும் இவர்கள், தங்களது நினைவலைகளை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி, மணவாள நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, சோழாவரம் காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் மற்றும் திருவள்ளூர் தாலுகா காவல் ஆய்வாளர் நடராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, சிறப்பு எஸ்.ஐ.க்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்ச்சியில், 24 ஆண், 12 பெண் உட்பட 36 காவல் சிறப்பு எஸ்.ஐ.க்கள் பங்கேற்று, தங்களது நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர்.