திருப்பூர்;திருப்பூர் அருகே துணி துவைக்க பாறைக்குழிக்கு சென்ற பெண் உயிரிழந்தார். அவரை காப்பாற்ற கை கொடுத்த சிறுமியும் தண்ணீரில் முழ்கி இறந்தார்.திருப்பூர் வாவிபாளையம், பாலாஜி கார்டன் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி; டிரைவர். இவரது மனைவி உமா, 28. நேற்று தனது குழந்தைகள் அகிலேஷ், 5, மது, 3 மற்றும் ஈஸ்வரன் என்பவரது மகள், காவ்யா, 14 ஆகியோருடன் நாதம்பாளையத்தில் உள்ள பாறைக்குழிக்கு துணி துவைக்க சென்றார்.
அப்போது, பாறை வழுக்கி உமா ஆழமான பகுதியில் விழுந்தார். தவறி விழும்போது, காவ்யாவின் கையை எட்டிப் பிடித்துள்ளார். இருவரும், தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.உடன் வந்த குழந்தைகளின் அழுகை சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் பெருமாநல்லுார் போலீசார், அவிநாசி தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் உமா, காவ்யா இருவரையும் சடலமாக மீட்டனர். காவ்யா அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இருவர் பலியானதால், வாவிபாளையம் கிராமம் சோகத்தில் மூழ்கியது.