திருப்பூர்:இந்திய வீரர்கள் பங்கேற்கும், கிரிக்கெட் தொடர், நேபாளம் நாட்டில், அடுத்த மாதம் 10, 11, 12ம் தேதிகளில் நடக்கிறது. தொடரில் விளையாட, தமிழக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேர், இந்திய அணியில் தேர்வாகியுள்ளனர்.
இதில், திருப்பூர், மங்கலம் அக்ஹாரப்புத்துாரை சேர்ந்த ஷாகுல் ஹமீது, ஈரோடு-மணிவண்ணன், அரியலுார் - சந்தோஷ் குமார் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். ஷாகுல் ஹமீது கூறியதாவது:மங்கலம் அரசு பள்ளியில், 10ம் வகுப்பு வரை படித்தேன். வலது கை பாதித்திருந்தாலும், தன்னம்பிக்கையுடன் விளையாடி வருகிறேன். தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியில் சேர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். கிராமத்தில் இருந்து பயிற்சி பெற்ற நான், முதன்முறையாக வெளிநாட்டுக்கு சென்று விளையாட இருக்கிறேன். நேபாள கிரிக்கெட் தொடரில், முழு திறமையையும் வெளிப்படுத்தி, இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், சாதனை படைப்போம். இவ்வாறு, அவர் கூறினார்.