சென்னை: காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட புலிக்குட்டிக்கு, வேட்டையாடும் பழக்கத்தை ஏற்படுத்துவதாக கூறி தினமும், 25 ஆயிரம் ரூபாயை, வனத் துறை அதிகாரிகள் செலவு செய்கின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில், செப்., 23ல், எட்டு மாத புலிக்குட்டி காயமடைந்த நிலையில், வனத் துறையால் மீட்கப்பட்டது. அது தற்போது, 16 மாத குட்டியாக உள்ளது. அதன் உடல் எடை, 118 கிலோவாக உள்ளது. தாயுடன் இருந்திருந்தால், தற்போது வேட்டையாடும் அளவுக்கு பயிற்சிபெற்று இருக்கும்.
மனிதர்கள் வளர்ப்பில் இருப்பதால், இந்த புலிக்குட்டி வேட்டையாடும் தன்மை இன்றி, வீட்டு விலங்கு போன்று நடமாடி வருகிறது. இதற்கு வேட்டையாடும் திறனை துாண்டும் வகையில் சிறப்பு பயிற்சி அளிக்க, வனத் துறை யினர் முடிவு செய்தனர்.
இதற்காக, 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கம்பி வேலி கூண்டு அமைத்து, அதில் ஆடு, மான் உள்ளிட்ட விலங்குகளை விட்டு வேட்டை பயிற்சி கொடுத்து வருகின்றனர். இதற்காக, தினமும் 25 ஆயிரம் ரூபாயை, வனத் துறையினர் செலவு செய்து வருகின்றனர்.