விழுப்புரம்: விழுப்புரத்தில், முன்னாள் கவுன்சிலரை, பெற்ற மகன்களே காரில் கடத்திக் கொலை செய்ய முயன்றதை போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் முகமதியார் தெருவைச் சேர்ந்தவர் அகமது, 57; தி.மு.க., முன்னாள் கவுன்சிலர். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவருக்கும், இவரது மகன்கள் அசார் அலி, 29, ஷாருக், 27, ஆகியோருக்கும் இடையே சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்தது.நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு தந்தைக்கும், மகன்களுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தந்தையை மகன்கள் இருவரும் தாக்கியுள்ளனர்.
இதில், காயமடைந்த அகமதுவை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் நண்பர்கள் சேர்த்தனர். அங்கு முதலுதவி பெற்று அதிகாலை, 4:00 மணிக்கு, வாடகை காரில் விழுப்புரத்தில் உள்ள வீட்டிற்கு வந்தார்.இங்கிருந்தால், மகன்கள் மீண்டும் தகராறு செய்வர் என எண்ணி, சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்ல காரில் புறப்பட்டார். இதையறிந்த அசார் அலி, ஷாருக் ஆகியோர், தங்களது நண்பர்கள் வினோத், நேதாஜி ஆகியோரோடு, இன்னொரு காரில் அகமது காரை பின் தொடர்ந்தனர்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை விழுப்புரம் ரயில்வே மேம்பாலம் அருகே சென்ற போது, அகமது காரை மறித்தனர். பின், அகமதுவை அவர்களின் காரில் கடத்திச் சென்று, கத்தியால் கழுத்தை அறுத்து வெளியே தள்ளி விட்டு தப்பிச் சென்றனர். காயமடைந்து உயிருக்குப் போராடிய அகமதுவை, அங்கிருந்தவர்கள் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பெறுகிறார்.
விழுப்புரம் தாலுகா போலீசார், அவரது மகன்கள் இருவர் மற்றும் வினோத், நேதாஜி ஆகியோர் மீது ஆள் கடத்தல், கொலை முயற்சி பிரிவுகளின் வழக்குப் பதிந்து, நால்வரையும் தேடி வருகின்றனர்.இதற்கிடையே விழுப்புரம் முத்தோப்பைச் சேர்ந்த சாரதி (௩௫) என்பவரை நேற்றிரவு கைது செய்தனர்.