ஊட்டி : குந்தா அணை பகுதியில், மின் வாரியத்துக்கு சொந்தமான, 35 ஏக்கரை ஆக்கிரமித்து, சிலர் தேயிலை சாகுபடி செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், குந்தா அணை, 89 அடி உயரம் கொண்டது. இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீரால் கெத்தை, பரளி மற்றும் பில்லுார் மின் நிலையங்களில், தினசரி, 455 மெகாவாட் மின்உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.குந்தா அணையை ஒட்டி மின் வாரியத்துக்கு சொந்தமான, 35 ஏக்கர் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து தேயிலை சாகுபடி செய்துள்ளனர். மின்வாரியம், வருவாய் துறையுடன் இணைந்து, 'சர்வே' செய்து ஆக்கிரமிப்பை உறுதிப்படுத்தியது.
மழைக்காலத்தில் தேயிலை தோட்டத்தில் இருந்து அடித்து வரப்படும் சேறும், சகதியும் அணையில் நிரம்புவதாலும், மின் உற்பத்தியில் அடிக்கடி தடை ஏற்படுகிறது. உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, அணையை முழுமையாக துார்வாரி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என, மின்வாரியம் தலைமை, குந்தா மின் வட்ட பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
குந்தா தாசில்தார் இந்திரா கூறுகையில்,''அணையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு குறித்து, சிறுவிவசாயிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.