சேலம் : மத்திய அரசு டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளதால், போக்குவரத்துக் கழகங்களுக்கு தினமும், 99 லட்சம் ரூபாய் எரிபொருள் செலவு குறைந்துள்ளது. இது, ஆண்டுக்கு, 357 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
போக்குவரத்துக் கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், போலீஸ் உள்ளிட்ட அரசுத்துறைகளுக்கு மொத்த கொள்முதல் டீசல் விலை, 118.16 ரூபாய்.இந்நிலையில், மத்திய அரசு டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளதால், நேற்று போக்குவரத்துக் கழகங்கள், 1 லிட்டர் டீசலை 95.01 ரூபாய்க்கு கொள்முதல் செய்தன. இதனால், 1 லிட்டர் டீசலுக்கு போக்குவரத்துக் கழகங்களுக்கு, 6.70 ரூபாய் மிச்சமாகி உள்ளது.
போக்குவரத்துக் கழகங்களின் எட்டு கோட்டங்களில், நாள் ஒன்றுக்கு, 14 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் டீசல் பயன் படுத்துகின்றனர். டீசல் விலை குறைப்பால், நாள் ஒன்றுக்கு, 99 லட்சம் ரூபாயும், மாதத்துக்கு, 29 கோடி ரூபாயும், ஆண்டுக்கு 357 கோடி ரூபாயும் செலவு குறைகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'மத்திய அரசின் டீசல் மீதான கலால் வரி குறைப்பால், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டுக்கு, 357 கோடி ரூபாய் எரிபொருள் செலவில் மிச்சமாகி உள்ளது.'இந்த செலவு குறைப்பு, நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் போக்குவரத்துக் கழகங்களுக்கு சற்று ஆறுதலை கொடுக்கும். இதே போல, மாநில அரசும் வரி குறைத்தால், போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இருந்து மீள வாய்ப்புள்ளது' என்றனர்.