மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராய மண்டப சீரமைப்பு பணிகளை துவக்க ஜூன் 1 அல்லது 13ம் தேதி நாள் குறிக்கப்பட்டுள்ளது.
அக்னியால் இம்மண்டபம் சேதமடைந்ததால் அக்னி நட்சத்திர நாட்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.இக்கோயிலில் 2018 பிப்.,2ல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பழமையான வீரவசந்தராய மண்டபம் முற்றிலும் சேதமடைந்தது. நான்கு ஆண்டுகளான நிலையில், மண்டப சீரமைப்பு பணி திருப்பூர் ஸ்தபதி வேல்முருகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கான கற்களை நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே களரம்பள்ளி மலையடிவார குவாரில் இருந்து கொண்டு வர ஆரம்பித்துள்ளனர். மண்டபத்தை வடிவமைக்க ரூ.11.70 கோடி அரசு ஒதுக்கியுள்ளது.சீரமைப்பு பணியை வைகாசி மாதத்திலேயே துவங்க நல்ல நாள் பார்க்கப்பட்டது. மே 4 முதல் 28 வரை அக்னி நட்சத்திரம் என்பதாலும், மே 28 வரையிலான நல்ல நாட்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது ஜூன் 1, ஜூன் 13 நல்லநாள் என குறித்து கொடுத்துள்ளனர். இதில் ஒருநாளில் பணிகளை துவங்கி ஓராண்டிற்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
மீனாட்சி அம்மன் கோயிலில் காலை 8:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை நாள்தோறும் உணவு வழங்கும் திட்டம் விரைவில் துவங்கப்பட உள்ளது. தற்போது தினமும் மதியம் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நாள்தோறும் அன்னதானம் துவங்கப்படும்போது தினமும் 3000 பேருக்கு உணவு வழங்கப்படும். இதற்காக கோயில் சார்பில் அன்னதான திட்டத்திற்கு ரூ.4 கோடி 'டெபாசிட்' செய்யப்பட்டுள்ளது. இதனால் தடையின்றி இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.