மின் கம்பங்களில்
படர்ந்த கொடிகள்
கரூர், மே 24-
கரூர் அருகே, டி.என்.பி.எல்., ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு மின் இணைப்பு கொடுக்க, மின்கம்பங்கள் அமைக்கப் பட்டு மின், 'சப்ளை' செய்யப்பட்டு வருகிறது. இதில் பல மின் கம்பங்களில் சிமென்ட் கான்கிரீட் உடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. சில இடங்களில் இதுபோன்ற கம்பங்கள் மீது, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால், பாரம் தாங்காமல் உடைந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், மின் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
சாக்கடையில் முட்புதர்கழிவுநீர் செல்ல தடை
கரூர், மே 24-
கரூர் அருகே, வேலாயுதம்பாளையத்தில் செல்லும் சாக்கடையில், முள்செடிகள் அதிகளவில் முளைத்துள்ளன. இதனால், கழிவுநீர் செல்ல முடியாமல் பல இடங்களில் தேங்கி நின்று, சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்துகிறது. தற்போது, மழை பெய்து வரும் நிலையில், கழிவுநீர் சாலையில் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியும் அதிகரித் துள்ளது. எனவே, சாக்கடையில் முளைத்துள்ள முள்செடிகளை அகற்றி, தடையின்றி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அக்னி சட்டி எடுத்து
பக்தர்கள் நேர்த்திக்கடன்
கிருஷ்ணராயபுரம், மே 24-
சிந்தலவாடி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, நேற்று, பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், அம்மன் திருத்தேரில் ஊர்வலமாக எடுத்து வந்து சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை முதல், சிந்தலவாடியை சுற்றியுள்ள கிராம மக்கள், லாலாப்பேட்டை காவிரி ஆற்றிலிருந்து அக்னி சட்டி எடுத்து வருதல் மற்றும் கரும்பு கட்டுகளை கொண்டு குழந்தைகளை சுமந்து செல்லுதல் ஆகிய நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கழிப்பிடத்தை பராமரிக்க
பெண்கள் வேண்டுகோள்
கரூர், மே 24-
கரூர் அருகே, முன்னுாற்றுமங்கலத்தில் பொது சுகாதார கழிப்பிடம் பல, ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அதை மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது, கழிப்பிடம் பயன்படுத்த முடியாமல் பழு தடைந்த நிலையில் உள்ளது.இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். மேலும், கழிப்பிடம்
உள்ள இடங்களை தேடிச் செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். எனவே, கழிப்பிடத்தை உடனடியாக சீரமைத்து, பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி
பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனைவி மாயம்
கணவர் புகார்
குளித்தலை, மே 24-
குளித்தலை அடுத்த, வேளாங்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ், 30. இவர் நாமக்கல் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காவியா, 22; இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மனைவி காவியா நாமக்கல் தனியார் டெக்ஸில் டெய்லராக பணிபுரிந்து வந்தார். கடந்த, 20ல், அய்யர்மலையில் உள்ள உறவினர் வீட்டிலிருந்து, குளித்தலையில் உள்ள டெய்லர் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது கணவர் செல்வராஜ் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
பைக் திருட்டு: போலீசில் புகார்
குளித்தலை, மே 24-
குளித்தலை அண்ணா நகர் உழவர் சந்தை பகுதியில், வாடகை வீட்டில் குடியிருந்து வருபவர் கவுதம், 28; இவர், தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை அடுத்த, பல்லவராயன்பட்டியை சேர்ந்தவர். இவர் கடந்த, 21 இரவு, 9:00 மணியளவில், வீட்டின் முன், டி.வி.எஸ்., அப்பாச்சி பைக்கை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதுகுறித்து, கவுதம் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மகிளிப்பட்டி கிராமத்தில்
வெண்டை சாகுபடி தீவிரம்
கிருஷ்ணராயபுரம், மே 24-
மகிளிப்பட்டி கிராமத்தில், வெண்டை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த மகிளிப்பட்டி, புனவாசிப்பட்டி ஆகிய பகுதியில் விவசாயிகள் காய்கறிகள் சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் குறைந்த நாட்களில் வருமானம் தரக்கூடிய வெண்டை சாகுபடியை அதிகம் செய்துள்ளனர். இதில், செடிகளில் காய்கள் நன்கு காய்த்து வருகின்றன. விளைந்த வெண்டைக்காய்களை பறித்து குளித்தலை, கரூர் மற்றும் உள்ளூர் வாரச்சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். ஒருகிலோ, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கிறது.