குளித்தலை பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை முன் அனைத்து அரசியல் கட்சியினரின் கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளன. கட்சி விசேஷ நாட்களில், இங்கு தொண்டர்கள் கூட்டமாக வந்து, கட்சி கொடியேற்றி, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து செல்வர். இதனால் கட்சியினர் மத்தியில் உற்சாகம் அதிகரித்து காணப்படும்.
இந்நிலையில், கடந்த நகர்ப்புற ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது, தேர்தல் நடைமுறையால், அனைத்து கொடி கம்பங்களையும் அகற்றிக்கொள்ள அறிவுறுத்தினர். அதன்படி, சம்பந்தப்பட்ட கட்சியினர் தாங்களாகவே கொடி கம்பத்தை அகற்றிக்கொண்டனர். தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகள் முடிவுக்கு வந்தவுடன், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் கொடி கம்பத்தை நட்டு, கட்சி கொடி பறந்து வருகிறது.
ஆனால், மீண்டும் அ.தி.மு.க., கொடி கம்பம் அமைக்காதது, கட்சி தொண்டர்களை சோர்வடைய செய்துள்ளதாக புலம்புகின்றனர். மேலும், நகர அ.தி.மு.க.,வில் புதிய பொறுப்பாளர்கள் நியமனத்தில் அதிருப்தியால், பலர் பா.ஜ.,வுக்கு மாறிவிட்டனர்.
அதனால், இழந்த உற்சாகத்தை மீண்டும் மீட்டெடுக்க, புதிய கொடி கம்பத்தை நட்டு, அ.தி.மு.க., கொடி பறக்க உண்மை விசுவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.